தமிழகத்தில் ரூ.350 கோடியில் பல்வேறு தடுப்பணைகள் கட்டப்படும்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


தமிழகத்தில் ரூ.350 கோடியில் பல்வேறு தடுப்பணைகள் கட்டப்படும்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Aug 2020 11:45 PM GMT (Updated: 10 Aug 2020 10:33 PM GMT)

தமிழகத்தில் ரூ.350 கோடியில் பல்வேறு தடுப்பணைகள் கட்டப்படும் என்றும், ஊட்டியில் ரூ.48 கோடியில் கால்நடை விந்தணு ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி, 

தமிழகத்தில் ரூ.350 கோடியில் பல்வேறு தடுப்பணைகள் கட்டப்படும் என்றும், ஊட்டியில் ரூ.48 கோடியில் கால்நடை விந்தணு ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்றால் உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் உறைந்து போயிருக்கின்ற இத்தருணத்தில், தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவி இயல்புநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக அரசு அறிவிக்கின்ற ஆலோசனைகளை கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சிறப்பான முறையில் பின்பற்றியதன் விளைவாக தற்போது வைரஸ் பரவல் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது.

ஊட்டியில் ஆராய்ச்சி நிலையம்

நான் அமெரிக்க நாட்டிலுள்ள ‘பப்பல்லோ’ பால் பண்ணைக்குச் சென்றிருந்த பொழுது, அங்கு ஒரு பண்ணையில் நாளொன்றுக்கு 1.25 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்தார்கள். அங்கு, நாள் ஒன்றுக்கு 60 முதல் 70 லிட்டர் பால் கொடுக்கக் கூடிய பசுக்களை வளர்த்து வருகிறார்கள். அதேபோல், நம்முடைய விவசாயிகளுக்கு, கால்நடை ஆராய்ச்சி நிலையம் மூலம் நம் மாநில சீதோஷ்ண நிலைக்குத் தகுந்தவாறு கலப்பினப் பசுக்களை உருவாக்கித் தந்து, அதன்மூலம் குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 25 லிட்டர் பால் கிடைக்கும்போது விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்கும்.

தற்போது இங்கு வளர்க்கக்கூடிய பசுக்கள் நாளொன்றுக்கு 10 லிட்டர் அளவில்தான் பால் கொடுக்கின்றது. அதுமட்டுமல்லாமல், விவசாயிகளுக்கு நேரடியாக கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில், கால்நடை வளர்ப்பு, கால்நடைகளுக்கு ஏற்படுகின்ற நோய் குறித்த பயிற்சியும் அளிக்கப்படும். பசு வளர்க்கும் வேளாண் பெருமக்கள், விரும்பும் கன்றை ஈன்று தருகின்ற அளவிற்கு மிக நவீன முறையில் ஊட்டியில் விந்தணு பிரிக்கின்ற ஒரு ஆராய்ச்சி நிலையத்தை ரூ.48 கோடி மதிப்பீட்டில் உருவாக்க இருக்கிறோம்.


பிரதமர், வேளாண் பெருமக்களின் குறைகளை தீர்ப்பதற்கு, உற்பத்தி செய்யப்படுகின்ற அதிகமான காய்கறிகள், பழங்கள், தானியங்களை சேமித்து வைப்பதற்கு சேமிப்பு கிடங்குகளில் வைக்க வேண்டும், மேலும் காய்கறி, பழங்கள் அதிகமாக விளைகின்றபோது விலை வீழ்ச்சியாகிறது. வீழ்ச்சி அடைகின்ற அந்த காலக்கட்டத்தில், அவைகளை பாதுகாத்து விலை ஏறுகின்றபோது அதை விற்பனை செய்தால் விவசாயிகள் இரட்டிப்பு வருமானத்தை பெறுவார்கள். அதற்காக வேளாண் பெருமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று ரூ.1 லட்சம் கோடி மதிப்பீட்டில் மத்திய அரசால் திட்டம் வகுக்கப்படும் என்ற அறிவிப்பை தந்திருக்கின்றார்கள். அதன் மூலமாக, ரூ.2 கோடி வரை, 3 சதவீத வட்டியில் மத்திய அரசு கடன் தருவதாகவும் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. இன்றைய தினம், அந்தத் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்திருக்கின்றார்கள். தமிழகத்தில் 10 மாவட்டங்களில் விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறி, பழங்களை வைப்பதற்கும், ‘ஆன்லைன்’ மூலம் விற்பனை செய்வதற்கும் ஒரு குடோன் கட்டுவதற்கு சுமார் ரூ.220 கோடி மத்திய, மாநில அரசுகள் அளித்து அந்த திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது.


நீர் மேலாண்மைத் திட்டத்தின் மூலம், தமிழ்நாடு முழுவதும் பருவ காலங்களில் பெய்கின்ற மழைநீர் வீணாகாமல் இருக்க தடுப்பணைகள் கட்டும் திட்டத்தை உருவாக்கி இதுவரை இரண்டாண்டு காலத்தில் சுமார் ரூ.640 கோடி செலவிடப்பட்டிருக்கின்றது. மேலும், இந்த ஆண்டு சுமார் ரூ.350 கோடி மதிப்பீட்டில் பல்வேறு தடுப்பணைகள் கட்டுவதற்கு திட்டம் தீட்டப்பட்டு, பணிகள் தொடங்க இருக்கின்றன.

கொரோனா வைரஸ் நோய்ப் பரவலைத் தடுப்பதற்காக அரசு எடுக்கின்ற முயற்சிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story