“எடப்பாடி பழனிசாமி என்றும் முதல்வர் என்ற இலக்குடன் தேர்தலை சந்திப்போம்” - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி


“எடப்பாடி பழனிசாமி என்றும் முதல்வர் என்ற இலக்குடன் தேர்தலை சந்திப்போம்” - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
x
தினத்தந்தி 11 Aug 2020 7:26 AM GMT (Updated: 11 Aug 2020 7:26 AM GMT)

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்க வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை,

மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, வரும் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி அதிமுக நிர்வாகிகள் புயல் வேகத்தில் பணியாற்றிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். அப்போது அவரிடம் அடுத்த தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, “அதிமுக கட்சியின் தொண்டர்களை தற்போது எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தலைவர்கள் வழிநடத்துவதால், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூடி யாரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவரே அடுத்த முதல்வர்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூவின் கருத்துக்கு மாறுபடும் விதமாக, தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “எடப்பாடி பழனிசாமியை முதல்வராக முன்னிறுத்தி தேர்தலை சந்திப்போம். வெற்றி கொள்வோம்”  என்று கூறியுள்ளார்.

Next Story