பொருளாதார சரிவை சரிசெய்ய ரூ.9 ஆயிரம் கோடி சிறப்பு மானியம்: பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை


பொருளாதார சரிவை சரிசெய்ய ரூ.9 ஆயிரம் கோடி சிறப்பு மானியம்: பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
x
தினத்தந்தி 12 Aug 2020 12:00 AM GMT (Updated: 11 Aug 2020 8:47 PM GMT)

கொரோனா தாக்கத்தால் நிலவும் பொருளாதார சரிவை சரிசெய்ய ரூ.9 ஆயிரம் கோடியை சிறப்பு மானியமாக வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, 

தமிழ்நாடு உள்ளிட்ட மாநில முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில், தலைமைச் செயலகத்தில் இருந்தபடி பங்கேற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

நாட்டிலேயே அதிக கொரோனா பி.சி.ஆர். சோதனைகளை தமிழகம் செய்து வருகிறது. நாளொன்றுக்கு 65 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படும் நிலையில் தினமும் ரூ.5 கோடி செலவாகிறது. இதில் 50 சதவீத செலவை பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதியில் (பி.எம். கேர்ஸ் நிதி) இருந்து அளிக்க வேண்டும்.

இந்தியாவில் தமிழகத்தில்தான் கொரோனா தொற்றினால் ஏற்படும் சாவு குறைவாக, அதாவது 1.6 சதவீதமாக உள்ளது. குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையிலும் 80.8 சதவீதம் என்ற அளவில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.

நோயாளிகள் சிறந்த சிகிச்சை பெற அதிநவீன ‘வெண்டிலேட்டர்’களை தமிழகம் வாங்குகிறது. அதற்குத் தேவையான நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும். 5.25 கோடி மூன்றடுக்கு முக கவசம், 48 லட்சம் என்.95 ரக முக கவசம், 41.3 லட்சம் பி.பி.இ. உபகரணம், 43.26 லட்சம் பி.சி.ஆர். சோதனை கருவிகளை தமிழக அரசு வாங்க உள்ளது.

சென்னை மாநகராட்சி, வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொள்கிறது. தினமும் 550 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. அரசு எடுக்கும் கடுமையான நடவடிக்கைகளால் சென்னையில் புதிய தொற்று ஏற்படாமல் குறையத் தொடங்கிவிட்டது. இதுபோன்ற நடவடிக்கைகள் தமிழகத்தின் மற்ற பாகங்களிலும் பின்பற்றப்படுகின்றன.

மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக மறுபடியும் பயன்படுத்தக் கூடிய 4.50 கோடி முக கவசங்களை கொள்முதல் செய்கிறோம். அவற்றை கொடுக்கத் தொடங்கிவிட்டோம்.

வரும் நவம்பர் வரை மக்களுக்கு வினியோகிப்பதற்காக 55 ஆயிரத்து 637 டன் துவரம் பருப்பை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். வெளிமாநில தொழிலாளிகள் 3.77 லட்சம் பேர் 253 ரெயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஆன செலவை தமிழக அரசே ஏற்றுள்ளது.

குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு அதிகபட்சம் கடன் வழங்க வங்கிகளை நான் கேட்டுக்கொண்டேன். இதன் மூலம் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 841 குறு, சிறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு ரூ.5,329 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சில முக்கிய கோரிக்கைகளை உங்கள் முன்பு வைக்கிறேன். தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.714.64 கோடி அவசரகாலம் மற்றும் நிவாரண தயார்நிலைத் தொகுப்பில் ரூ.512.64 கோடியை தமிழகம் பெற்றுள்ளது. இந்தத் தொகுப்பை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

பட்ஜெட் மதிப்பீட்டு அளவின்படி, மத்திய, மாநில வரி வருவாய் இருக்காது. அதில் பற்றாக்குறை ஏற்படும். அதை சரி செய்வதற்காகவும், கொரோனாவை எதிர்கொள்ளவும், அதற்குப் பின்வரும் பொருளாதார தாக்கங்களை சரிசெய்யவும் ரூ.9 ஆயிரம் கோடியை சிறப்பு மானியமாக அளிக்க வேண்டும்.

இந்த ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான ஜி.எஸ்.டி. நஷ்டஈட்டை சீக்கிரமாகத் தர வேண்டும். மாநில பேரிடர் நிவாரண நிதி ஏற்கனவே தீர்ந்துவிட்டதால், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும்.

நெல் கொள்முதலை ஊக்குவிக்கும் வகையில் நிலுவையில் உள்ள நெல் அரைவைத் தொகை ரூ.1,321 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். எரிசக்திப் பிரிவில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நிவாரண தொகுப்பு நிதியை அறிவிக்க வேண்டும்.

எரிசக்திப் பிரிவின் சீர்திருத்தத்துக்கான திட்டத்தை மாநிலங்கள் அமல்படுத்த அனுமதிக்க வேண்டும். பல நிதியுதவித் திட்டங்களை மாநில அரசு முன்மொழிந்துள்ளது. இதற்கான பொருளாதார விவகாரங்கள் துறையின் ஒப்புதலை விரைவாகப் பெற்றுத்தர வேண்டும்.

தமிழகத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் மேம்பட ஆயிரம் கோடி ரூபாய் வழங்க இந்திய சிறுதொழிற்சாலைகள் மேம்பாட்டு வங்கியை வலியுறுத்த வேண்டும். சுயஉதவிக் குழுக்களுக்கு குறைந்தது ரூ.2 லட்சம் வரை அனைத்து வங்கிகளும் வழங்கும் சிறப்புக் கடன் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்.

மத்திய அரசின் உத்தரவாதத்துடன் கூடிய சிறு தொழில் கடன் உத்தரவாத நிதி (சி.ஜி.எப்.எம்.யு.) சுய உதவிக் குழுக்களுக்கு வழங்குவதோடு அதை பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story