கொரோனா தொற்று இல்லை என்ற சான்றுடன் வந்த பயணிகளால் பரபரப்பு: ஏற்க மறுத்த அதிகாரிகளுடன் வாக்குவாதம்


கொரோனா தொற்று இல்லை என்ற சான்றுடன் வந்த பயணிகளால் பரபரப்பு: ஏற்க மறுத்த அதிகாரிகளுடன் வாக்குவாதம்
x
தினத்தந்தி 11 Aug 2020 10:05 PM GMT (Updated: 11 Aug 2020 10:05 PM GMT)

சென்னை விமானநிலையத்தில் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றுடன் வந்த பயணிகளால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை ஏற்க மறுத்த அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆலந்தூர், 

கொரோனா ஊரடங்கால் அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை ஆகிய நாடுகளில் தவித்த 309 பேர் 4 சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை வந்தனர். அவர்கள் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று கொண்டு வந்த சான்றுகளை அதிகாரிகள் ஏற்க மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் சிக்கிய இந்தியர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வரும் ‘வந்தே பாரத்’ என்ற திட்டத்தின் மூலம் தமிழகத்தில் மட்டும் 53 ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் வந்து சேர்ந்தனர்.

இந்த நிலையில் அமெரிக்கா நாட்டின் சிகாக்கோவில் இருந்து 1 குழந்தை, 28 பெண்கள் உள்பட 58 பேரும், சிங்கப்பூரில் இருந்து 1 குழந்தை, 7 பெண்கள் உள்பட 60 பேரும், துபாயில் இருந்து 14 குழந்தைகள், 43 பெண்கள் உள்பட 179 பேரும், இலங்கையில் இருந்து 12 பேர் என 309 பேர் 4 சிறப்பு விமானங்களில் சென்னை வந்தனர்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள் 96 மணி நேர பயணத்திற்கு முன்பாக கொரோனா சோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்றை 72 மணி நேரத்திற்கு முன் இணையதளம் முலமாக தெரியப்படுத்த வேண்டும்.

அவ்வாறு செய்தால் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு செல்லாமல் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதித்து இருந்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் நேற்று வெளிநாடுகளில் இருந்து வந்த இறங்கிய சிலர் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்ற மருத்துவ சான்றை காண்பித்தனர். ஆனால் அதை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஏற்க மறுத்ததால் பயணிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, 4 சிறப்பு விமானங்களில் வந்த 309 பேருக்கும் தமிழக சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனைக்காக சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பின்னர் அவர்கள் சென்னையில் உள்ள கல்லூரி மற்றும் ஓட்டல்களில் தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் சிகாக்கோ நகரில் இருந்து டெல்லி வழியாக சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு சிறப்பு விமானத்தில் வந்த 58 பேரில் பெரும்பான்மையான பயணிகளின் உடைமைகள் வந்து சேரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் விமானநிலைய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால் விமான நிலைய அதிகாரிகள், ஏர்இந்தியா அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். சிகாக்கோ, டெல்லி விமான நிலைய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, டெல்லியில் விமானம் மாறும்போது பயணிகளின் உடைமைகள் தவறுதலாக டெல்லியில் சிக்கியது தெரியவந்தது.

இதையடுத்து ஏர்இந்தியா அதிகாரிகள் பயணிகளிடம் வருத்தம் தெரிவித்தனர். அதோடு பயணிகள் உடைமைகள் இன்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டு ஒப்படைக்கப்படும் என்று உறுதியளித்தனர்.


Next Story