கள்ளக்காதலி கொலை வழக்கில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கைது


கள்ளக்காதலி கொலை வழக்கில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கைது
x
தினத்தந்தி 11 Aug 2020 10:27 PM GMT (Updated: 11 Aug 2020 10:27 PM GMT)

கள்ளக்காதலி மர்ம சாவில் திடீர் திருப்பமாக, அவரை கொலை செய்ததாக ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

அம்பை, 

நெல்லை மாவட்டம் அம்பை வேலாயுத நகரைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 35). இவர் கடந்த 8-ந் தேதி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தன.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அம்பை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார், மர்ம சாவு என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில், அயன்சிங்கம்பட்டியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான நடராஜன் (62) என்பவர் சுப்புலட்சுமியை கொன்றது தெரியவந்தது. அதாவது சுப்புலட்சுமிக்கும், நடராஜனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்கள் 2 பேரும் வேலாயுத நகரில் வசித்து வந்தனர்.

அப்போது, சுப்புலட்சுமி மது பழக்கத்திற்கு ஆளாகி தனியாக வெளியே சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது. இதை நடராஜன் தட்டிக் கேட்டுள்ளார். கடந்த 8-ந் தேதி மீண்டும் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த நடராஜன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சுப்புலட்சுமியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அம்பை போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர். பின்னர் அவரை அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

Next Story