மாநில செய்திகள்

அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்டது - ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வாதம் + "||" + Gutka was taken into the assembly to bring to the attention of the state - In HighCourt. DMK Side argument

அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்டது - ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வாதம்

அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்டது - ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வாதம்
புகையிலை பொருட்கள் எளிதில் தாராளமாக கிடைப்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு வரவே தி.மு.க. உறுப்பினர்கள் சட்டமன்றத்துக்குள் கொண்டு சென்றதாக ஐகோர்ட்டில் மூத்த வக்கீல்கள் நேற்று வாதிட்டனர்.
சென்னை, 

தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் எளிதில் தாராளமாக கிடைப்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு வரவே தி.மு.க. உறுப்பினர்கள் சட்டமன்றத்துக்குள் கொண்டு சென்றதாக ஐகோர்ட்டில் மூத்த வக்கீல்கள் நேற்று வாதிட்டனர்.

தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தடை செய்யப்பட்ட இந்த புகையிலை பொருட்கள் தாராளமாக தமிழகத்தில் கிடைப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். கடந்த 2017-ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தி.மு.க.வினர் கொண்டு சென்று சபாநாயகரிடம் காண்பித்தனர். இதையடுத்து தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிமைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்ந்து, அந்த நோட்டீசுக்கு தடை பெற்றனர். பின்னர் இந்த வழக்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்தநிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் சார்பில் மூத்த வக்கீல்கள் சண்முகசுந்தரம், என்.ஆர்.இளங்கோ, அமித் ஆனந்த் திவாரி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது அவர்கள், உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், கே.பி.பி.சாமி ஆகியோர் இறந்து விட்டதாகவும், கு.க.செல்வத்துக்கு தாங்கள் ஆஜராகவில்லை என்றும் கூறினர்.

பின்னர் அவர்கள் தங்களது வாதத்தில் கூறியதாவது:-

பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் சில கருத்துக்களை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு எதிராக தெரிவித்தார். அதற்காக மு.க.ஸ்டாலினிடம் நஷ்டஈடு கேட்டு துணை சபாநாயகர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த துணை சபாநாயகர் இந்த உரிமைக்குழுவின் தலைவராக உள்ளார். அவர் இந்த பிரச்சினையை விசாரிக்கக்கூடாது. உரிமை மீறல் பிரச்சினையில், சட்டமன்ற விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை. சம்பவம் நடந்து பல நாட்களுக்கு பின்னர் உள்நோக்கத்துடன் இந்த பிரச்சினையை உரிமைக்குழு விசாரணைக்கு சபாநாயகர் பரிந்துரைத்துள்ளார்.

ஏனென்றால், 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், ஆளும் அ.தி.மு.க., எம்.எல்.ஏக்கள் சிலர் தமிழக கவர்னரை சந்தித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக மனு அளித்தனர். இதனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு கவர்னரிடம் தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் கடிதம் கொடுத்தனர். உடனே தடை செய்யப்பட்ட பொருட்களை சபைக்குள் கொண்டு வந்ததாக, இதற்காக நடவடிக்கை எடுப்பதற்காக உரிமைக்குழுவுக்கு சபாநாயகர் பரிந்துரை செய்தார்.

குட்கா போன்ற புகையிலையை பயன்படுத்துவோருக்கு புற்றுநோய் அதிகம் வருவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இந்த புகையிலையை பயன்படுத்தும் இளைய சமுதாயம் புற்றுநோயால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் செயல்பட்டுள்ளார். தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தமிழகத்தில் எளிதில் தாராளமாக கிடைக்கிறது என்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காகவே அவற்றை அவைக்குள் கொண்டு சென்று காண்பிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையால் சபாநாயகரையோ, அவையையோ அவமதிக்கவில்லை. இதில் உரிமை மீறலும் இல்லை. சட்டமன்றத்துக்குள் கருத்துரிமை உள்ளது. கருத்து தெரிவித்ததற்காக உறுப்பினர்களுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சினை எழுப்ப முடியாது. உரிமை மீறல் என்று முடிவு எடுத்த சபாநாயகர், அந்த விவகாரத்தை உரிமைக்குழுவுக்கு அனுப்பாமல் சட்டமன்றத்திலேயே விவாதித்திருக்க வேண்டும்.

சட்டமன்றத்தில் உரிமை மீறல் பிரச்சினையை எடுத்து உரிமைக்குழுவுக்கு அனுப்பியபோது மனுதாரர்கள் தரப்பு கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்கவில்லை.

அதனால் மனுதாரர்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸ் சட்டவிரோதமானது. அதை ரத்து செய்யவேண்டும். இந்த பிரச்சினையில் ஐகோர்ட்டு தலையிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். இதையடுத்து இந்த வழக்கு இன்றும் (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.