கடந்த 10 ஆண்டில் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி


கடந்த 10 ஆண்டில் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 13 Aug 2020 10:30 PM GMT (Updated: 13 Aug 2020 8:40 PM GMT)

கடந்த 10 ஆண்டுகளில் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கோயம்பேட்டை சேர்ந்த பரம்பரை வைத்தியர் தணிகாசலம், சமூக வலைதளங்களில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டார். இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தணிகாசலத்தை கைது செய்தனர். பின்னர் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஓர் ஆண்டுக்கு சிறையில் அடைத்தனர். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தணிகாசலத்தின் தந்தை கலிபெருமாள் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் சித்தா உள்ளிட்ட இந்திய மருத்துவத்துக்கு மத்திய,

மாநில அரசுகள் ஏன் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை? என்றும் சித்த மருத்துவத்தை சந்தேகப் பார்வையுடன் ஏன் பார்க்க வேண்டும்? என்றும் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, இந்திய மருத்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும், பெரும் தொகை ஒதுக்கீடு செய்வதாகவும் கூறியிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் கே.பாலு, இந்திய பாரம்பரிய வைத்தியமான சித்தா, யுனானி, ஆயுர்வேதா, யோகா, ஓமியோபதி ஆகிய மருத்துவத்தில், ஆயுர்வேதாவுக்கு மட்டுமே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பிற மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை” என்று குற்றம் சாட்டி வாதிட்டார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “கடந்த 10 ஆண்டுகளில் சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட 5 இந்திய மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? அதுவும் சித்தாவுக்கு எவ்வளவு? ஆயுர்வேதாவுக்கு எவ்வளவு? என்று தனித்தனியாக பிரித்து விளக்கம் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.


Next Story