சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதிப்பு; மொத்த நபர்களில் 88% பேர் குணமடைந்துள்ளனர் - அமைச்சர் காமராஜ் தகவல்


சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதிப்பு; மொத்த நபர்களில் 88% பேர் குணமடைந்துள்ளனர் - அமைச்சர் காமராஜ் தகவல்
x
தினத்தந்தி 14 Aug 2020 8:55 AM GMT (Updated: 14 Aug 2020 8:55 AM GMT)

சென்னை மாநகராட்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்த நபர்களில் 88% பேர் குணமடைந்துள்ளனர் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அண்ணாநகர், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களில் கொரோனா தொற்றுநோயை தடுப்பது குறித்து உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இரா.காமராஜ், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுடன் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் கூறியதாவது:-

பெருநகர் சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று நோய் பரவுவதை கட்டுப்படுத்த முதல்வரின் ஆலோசனைப்படி, தமிழ்நாடு அரசு கரோனா நோய் தொற்று தடுப்புப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டதன் காரணமாகவும், பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தியதாலும், சென்னை மாநகராட்சி முழுவதும் நோயினால் பாதிக்கப்பட்ட மொத்த நபர்களில் 88% பேர் குணமடைந்துள்ளனர். குறிப்பாக 8-வது மண்டலத்தில் 89%, 9-வது மண்டலத்தில் 91%, 10-வது மண்டலத்தில் 88% பேர் குணமடைந்துள்ளனர்.

மே மாதம் 8-ம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடத்தப்பட்ட 31 ஆயிரத்து 702 மருத்துவ முகாம்கள் கொரோனா நோய் தொற்றைக் கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக அமைந்ததுள்ளது. இதில் 17 லட்சத்து 86 ஆயிரத்து 970 நபர்கள் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டதில் 1 லட்சத்து 2,390 நபர்களுக்குக் காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் கண்டறியப்பட்டு 96 ஆயிரத்து 805 நபர்களுக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு நடத்தப்படும் மருத்துவ முகாம்களில் பொதுமக்கள் வந்து பரிசோதனை செய்து கொள்ள நடவடிக்கை எடுக்கவும், தொற்று அறிகுறி தென்படுபவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து குணமடைந்து வீடு திரும்பும் வரை தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கவும், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தி பொதுமக்களிடம் கொரோனா தொற்று பராவாமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கொரோனா நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்தோ, தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளிலிருந்தோ வெளியே வராமல் இருப்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அத்தகைய நபர்களுக்கு அரசு அறிவுறுத்தும் தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்ற அறிவுறுத்த வேண்டும். கொரோனா நோய் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் அனைவரும் தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். வெளியில் வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்த வேண்டும்.

எனவே, முதல்வரால் தமிழ்நாட்டில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தி வெகு விரைவில் நோய் தொற்று இல்லாத மாநிலமாக மாற்ற எடுக்கப்பட்டு வரும் சீரிய நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் உரிய ஒத்துழைப்பு அளித்து அரசு கூறும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

கொரோனா தொற்றைத் தடுப்பதற்காக மைக்ரோ திட்டத்தில் செயலாற்றும் இளநிலை பொறியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வ பணியாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மண்டலத்தின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா நோய் தொற்றுத் தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story