மாநில செய்திகள்

17-ந்தேதி முதல் தாமதம் இன்றி உடனடியாக கிடைக்கும்: விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ‘இ-பாஸ்’ - எடப்பாடி பழனிசாமி உத்தரவு + "||" + Available immediately without delay from 17th: ‘e-Pass’ for all applicants - Edappadi Palanisamy Order

17-ந்தேதி முதல் தாமதம் இன்றி உடனடியாக கிடைக்கும்: விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ‘இ-பாஸ்’ - எடப்பாடி பழனிசாமி உத்தரவு

17-ந்தேதி முதல் தாமதம் இன்றி உடனடியாக கிடைக்கும்: விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ‘இ-பாஸ்’ - எடப்பாடி பழனிசாமி உத்தரவு
17-ந்தேதி முதல், விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தாமதம் இன்றி உடனடியாக இ-பாஸ் வழங்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.
சென்னை, 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக, வெளிநாட்டில் இருந்து இந்தியா வருபவர்களுக் கும், மாநிலம் விட்டு மாநிலம் செல்பவர்களுக் கும் இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. இ-பாஸ் நடைமுறை கடுமையாக இருந்ததால், மக்கள் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல மிகவும் அவதிப்பட்டனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களையும் 8 மண்டலங்களாக பிரித்து, ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்பிறகும், கொரோனா பாதிப்பு குறையாததால், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பலர் வேலைக்கு செல்வதில்கூட சிரமம் ஏற்பட்டது.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள், இ-பாஸுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மருத்துவம், திருமணம், இறப்பு போன்ற விஷயங்களுக்கு தவிர, பிற விஷயங்களுக்காக விண்ணப்பித்தால் இ-பாஸ் கிடைப்பதில்லை என்பது பெரும்பாலானோரின் குற்றச்சாட்டாக இருந்தது.

பணத்துக்கு ஆசைப்பட்ட சில அதிகாரிகள், தவறான முறையில் இ-பாஸ் வழங்க முன்வந்ததால், இடைத்தரகர்களின் ஆதிக்கம் தலைதூக்கியது. இதனால், பொதுமக்கள் வெறுத்துப்போனார்கள். பணம் வாங்கிக்கொண்டு இ-பாஸ் பெற்றுக்கொடுக்கும் வேலையில் ஈடுபட்ட இடைத்தரகர்கள் சிலர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், கடந்த 1-ந்தேதி முதல் இ-பாஸ்நடைமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று அரசு அறிவித்தது. அதேசமயம் இ-பாஸ் முறையை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் முழுவதும் எழுந்தது.

இந்த நிலையில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் உடனடியாக இ-பாஸ் வழங்க உத்தரவிட்டு இருப்பதாக அவர் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க. அரசு கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், சிகிச்சைகளை அளித்தும், நிவாரணங் களை வழங்கியும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. நோய்த் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய்த் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு, ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது.

நோய்த் தொற்று பரவுவதை தடுக்க, திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், பணி சம்பந்தமாக பயணித்தல், வெளியிடங்களுக்குச் சென்று சொந்த ஊர் திரும்புதல் ஆகிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க விண்ணப்பிக்கப்படும் இ-பாஸ் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் கண்காணிக்கப்பட்டு, நோய்த்தொற்று ஏற்பட்டால் அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும் பயணிக்க (மாவட்டங்களுக்கு இடையே) 17-8-2020 (திங்கட்கிழமை) முதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன் தொலைபேசி அல்லது அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால், இ-பாஸ் அனுமதி எவ்வித தாமதமும், தடையுமின்றி உடனுக்குடன், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை, அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்தி தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் இ-பாஸுக்கு விண்ணப்பம் செய்து, இ-பாஸ் பெற்று பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எனினும், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வர தற்போதுள்ள இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்.

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த அரசின் நிலையான வழிகாட்டி நடைமுறைகளை கடைபிடிக்கவும், அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.