இன்று சுதந்திர தினம்: எடப்பாடி பழனிசாமி கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றுகிறார்


இன்று சுதந்திர தினம்: எடப்பாடி பழனிசாமி கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றுகிறார்
x
தினத்தந்தி 14 Aug 2020 11:30 PM GMT (Updated: 14 Aug 2020 8:12 PM GMT)

இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக அரசின் சார்பில் இன்று காலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியேற்றி உரையாற்றுகிறார்.

சென்னை, 

நாட்டின் 74-வது சுதந்திர தினம் இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 8.30 மணிக்கு இந்த நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை காரின் முன்னாலும், பின்னாலும் சென்னை காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வருகின்றனர்.

கோட்டை கொத்தளத்தின் முன்பாக இருக்கும் அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடை அருகே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 8.33 மணிக்கு வந்திறங்குவார். அங்கு அவருக்கு பூங்கொத்து கொடுத்து தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வரவேற்பார்.

அங்கிருந்த தென்னிந்திய பகுதிகளின் தலைமைப் படைத் தலைவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப்படைத் தளம் விமானப்படை அதிகாரி, கிழக்கு மண்டல கடலோரக் காவல்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல், தமிழக டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் - ஒழுங்கு) கே.ஜெயந்த் முரளி ஆகியோரை மரபுப்படி முதல்-அமைச்சருக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைப்பார்.

பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் மேடைக்கு முதல்-அமைச்சரை தலைமைச் செயலாளர் அழைத்துச் செல்வார். அங்கிருந்தபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார். பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திறந்த ஜீப்பில் ஏறிச் சென்று, போலீஸ் அணிவகுப்பை பார்வையிடுவார்.

பின்னர் 8.45 மணிக்கு கோட்டை கொத்தளத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருவார். அங்கிருந்தபடி மூவர்ண தேசியக் கொடியை அவர் ஏற்றி வைப்பார். மூவர்ண பலூன்கள் அப்போது பறக்கவிடப்படும்.

மேலும், போலீஸ் பேண்டு வாத்தியக் குழுவினர் தேசிய கீதத்தை இசைப்பார்கள். பின்னர் சுதந்திர தின உரையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்தபடி நிகழ்த்துவார்.

அதன் பின்னர் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான விருதுகளை முதல்-அமைச்சர் வழங்குவார். இந்த ஆண்டுக்கான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்-அமைச்சரின் சிறப்பு விருது, முதல்-அமைச்சரின் சிறந்த பணிக்கான விருது, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கு சேவையாற்றியவர் விருது (5 விருதுகள்), பெண்கள் நலனுக்காக உழைத்தவர்களுக்கான விருது (2 விருதுகள்), சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருது (7 விருதுகள்), கொரோனா தடுப்புப் பணியில் முன்களப் பணியாளர்களுக்கு (27 பேர்) விருதுகள் போன்ற விருதுகள் வழங்கப்படும்.

பின்னர் விருது பெற்றவர்களுடன் 9.34 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குழுப் புகைப்படம் எடுத்துக்கொள்வார். 9.39 மணிக்கு கோட்டையில் இருந்து அவர் வீட்டுக்கு புறப்பட்டுச் செல்வார்.

தற்போது கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இந்த விழாவில் பொதுமக்கள், மாணவர்கள் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவை டி.வி.யில் கண்டு மகிழுங்கள் என்று அனைவருக்கும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

விழாவுக்கு அழைக்கப்பட்டவர்கள் அமர்வதற்காக கோட்டை கொத்தளத்துக்கு எதிரே சமூக இடைவெளிவிட்டு இருக்கைகள் போடப்பட்டுள்ளன. அனைவரும் முக கவசம் அணிந்து வர வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான அப்துல்கலாம் விருது பெறுபவரின் பெயரை அரசு நேற்று வெளியிட்டுள்ளது. அதுதொடர்பான அரசாணையில், மனிதநேயம் மற்றும் மாணவர்களின் நலனுக்காக பங்களித்தவருக்கு முதல்-அமைச்சரால் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருது, 8 கிராம் தங்கப் பதக்கம், ரூ.5 லட்சத்துக்கான காசோலை, மற்றும் சான்றிதழைக் கொண்டதாகும். இந்த விருதுக்கான நபராக, சென்னை ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளையின் நிறுவனர் எஸ்.செல்வகுமாரை தேர்வு செய்து, விருது குழு பரிந்துரைத்தது.

அந்த பரிந்துரையை ஏற்று அவருக்கு அப்துல்கலாம் விருதை வழங்க அரசு முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.


Next Story