கோவில் பணியாளர்களுக்கு நிதி உதவி: இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு


கோவில் பணியாளர்களுக்கு நிதி உதவி: இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு
x
தினத்தந்தி 15 Aug 2020 8:15 PM GMT (Updated: 15 Aug 2020 7:35 PM GMT)

கோவில் பணியாளர்களுக்கு நிதி உதவி வழங்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

தமிழக இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச்செயலாளர் மற்றும் கமிஷனர் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று காரணமாக அரசு அறிவித்த ஊரடங்கினால் கோவில் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, கடந்த மார்ச் 15-ந்தேதி முதல் ஏப்ரல் 15-ந்தேதி வரை உள்ள காலத்திற்கு உதவித்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அதேபோல் ஏப்ரல் 16-ந்தேதி முதல் மே 15-ந்தேதி வரை உள்ள காலத்திற்கு ஆயிரம் ரூபாய் வழங்க அனுமதிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக கோவில் பணியாளர்களுக்கு மே 15-ந்தேதி முதல் ஜூன் 30-ந்தேதி வரையிலான 1½ மாத காலத்திற்கு தலா ரூ.1,500 வீதம் அந்தந்த கோவில் நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பக்தர்கள் தரிசனத்திற்கு திறக்கப்படாத கோவில்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஜூலை 1-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரையிலான கால கட்டத்திற்கு ஆயிரம் ரூபாய் வீதம் கோவில் நிதியிலிருந்து வழங்க அனைத்து அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

நிதி வசதி இல்லாத கோவில்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு நிதியுதவி வழங்க தேவைப்படும் தொகையை, அருகில் உள்ள நிதி வசதி உள்ள கோவில்களில் இருந்து கடனாக பெற்று அந்தந்த உதவி ஆணையர்களுக்கு வழங்க மண்டல இணை ஆணையர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story