புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு: சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு: சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Aug 2020 10:13 PM GMT (Updated: 16 Aug 2020 10:13 PM GMT)

புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி, 

புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது:-

புதிய கல்வி கொள்கையை திணிக்க முயல்கிறார்கள். 3-வது மொழியாக இந்தி படிப்பதால் தேசிய ஒருமைப்பாடு உருவாகும் என்கிறார்கள். பல மொழிகள் என்றால் ஒரு நாடாக இருக்கும். ஒரே மொழி என்றால் பல நாடுகள் எங்கே பிறக்கும். இதை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்,

புதிய கல்வி கொள்கையை நாங்கள் ஏற்கவில்லை, எதிர்க்கிறோம். கொரோனா பரவலை தடுப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையில் அரசின் நிர்வாகத்தையும், அதிகாரத்தையும் குறை சொல்ல முடியாது. மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவேண்டும். கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்காத வரை மற்றவர்களை குறை சொல்லி பயனில்லை.

அ.தி.மு.க.வில் முதல்- அமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்து எழும் விவகாரம் அவர்களது உட்கட்சி பிரச்சினை. தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் ஒரு அணி உருவானால் எங்களுக்கு மகிழ்ச்சிதான். அதை அவர்கள் உருவாக்கி காட்டட்டும். வருகிற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். நானும் அதில் போட்டியிடுவேன்.

விநாயகர் சதுர்த்திக்கு இந்த வருடம் பொது இடங்களில் சிலை வைப்பதற்கும், ஊர்வலத்துக்கும் அரசு தடை விதித்திருப்பது கொரோனாவின் சூழலை கருதி அக்கறையுடன்தான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

அதற்கு மாறாக தடையை மீறி சிலைகள் வைப்போம் என சொல்வது சரியானது கிடையாது. இந்த வருடம் இல்லை என்றால் அடுத்த வருடம் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story