பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் கேட்டு கொடுத்த மனு ஜூலை 27 ஆம் தேதியே நிராகரிக்கப்பட்டு விட்டது - சிறைத்துறை தகவல்


பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் கேட்டு கொடுத்த மனு ஜூலை 27 ஆம் தேதியே நிராகரிக்கப்பட்டு விட்டது - சிறைத்துறை தகவல்
x
தினத்தந்தி 18 Aug 2020 9:55 AM GMT (Updated: 18 Aug 2020 9:55 AM GMT)

பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் கேட்டு கொடுத்த மனு ஜூலை 27 ஆம் தேதியே நிராகரிக்கப்பட்டு விட்டது என்று சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி பேரறிவாளன், ராபர்ட் பயஸ், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் நளினி வேலூர் பெண்கள் சிறையிலும், அவரது கணவன் முருகன் ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். 28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் தங்களை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுவித்து வருகின்றனர். இதனிடையே தந்தையின் உடல்நிலையை காரணம் காட்டி அடிக்கடி பேரறிவாளன் பரோலில் வெளியே வந்து கொண்டிருந்த நிலையில், முருகனும் நளினியும் விடுவிக்க கோரி போராட்டம் நடத்தி வந்தனர்.

எழுவரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டும், இவர்களை சிறையில் இருந்து விடுவிப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பேரறிவாளன் பரோல் குறித்து சிறைத்துறை பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணை நடந்த போது, பேரறிவாளனின் பரோல் மனு நிராகரிக்கப்பட்டு விட்டதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 27 ஆம் தேதியே பரோல் மனு நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும் சிறை  தெரிவித்துள்ளது. தண்டனை நிறுத்திவைப்பு விதிகளில்  'பரோல்' என்ற வார்த்தையே இல்லை என்றும் விடுப்பு' மட்டுமே வழங்க சிறை விதிகள் வகை செய்கிறது. மேலும் ஏற்கனவே விடுப்பு பெற்ற 2 ஆண்டுகளுக்கு பிறகே விடுப்பு வழங்க முடியும் என்று சிறைத்துறை தெரிவித்துள்ளது.

Next Story