தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு- சாலைகள் வெறிச்சோடின


தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு- சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 23 Aug 2020 9:19 AM GMT (Updated: 23 Aug 2020 9:19 AM GMT)

தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்படுகிறது.

சென்னை,

கொரோனாவுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று ஊரடங்கு. ஊரடங்கு அமல்படுத்துவதால் பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியில் கூடுவது தவிர்க்கப்படுகிறது.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கொண்டுவரப்பட்டது. இருப்பினும் வாரத்தின் இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, கடந்த ஜூலை மாதத்தில் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்தது.

அதேபோல், இந்த மாதமும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த ஜூன் 21, 28, ஜூலை 5, 12, 19, 26 மற்றும் கடந்த 2, 9, 16-ந்தேதி ஆகிய 9 முறை தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) 10-வது முறையாக தளர்வு இல்லாத முழு ஊரடங்கு  கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினம் மருந்து, பால் கடைகள் மற்றும் மருத்துவமனைகளை தவிர மற்ற நிறுவனங்கள், கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், கடை வீதிகள் வெறிச்சோடின. 

சென்னையில் 195 இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால், சாலைகள் வெறிசோடின. அநாவசியமாக வெளியே சுற்றி திரிந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தின் முக்கிய நகரங்கள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story