சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: முருகன், தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி


சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு:  முருகன், தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
x
தினத்தந்தி 25 Aug 2020 10:52 AM GMT (Updated: 25 Aug 2020 10:52 AM GMT)

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான முருகன், தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜாவின் ஜாமீன் மனுக்களை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

மதுரை,

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.  இந்த கொலை சம்பவத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளை  தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில்,  முருகன், காவலர் முத்துராஜ், தாமஸ் பிரான்சிஸ் தாக்கல் செய்த ஜாமீன் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் சிபிஐ தாக்கல் செய்துள்ள மனுவில்,

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்புக்கு உடலில் கடுமையான காயங்கள் இருந்ததே காரணம் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயராஜ்,பென்னிக்ஸ் உடலில் காயங்கள் இருந்தன.

பென்னிக்ஸ் உடலில் 13 இடங்களிலும், ஜெயராஜ் உடலில் 17 இடங்களிலும் காயங்கள் இருந்தாக உடற்கூறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வழக்கு தொடர்பாக சிபிசிஐடி 60 பேரையும், சிபிஐ 35 பேரையும் விசாரித்துள்ளது. சிபிஐ விசாரணை இன்னும் முடிவடையாததால் ஜாமீன் வழங்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து  தலைமைக்காவலர் முருகன், காவலர்கள் தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சிபிஐ தரப்பில் முழுமையான அறிக்கை தாக்கல் செய்த பின் ஜாமீன் கொடுப்பது பற்றி பரிசீலிக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துவிட்டது.

Next Story