காஞ்சீபுரத்தில் விஷவாயு தாக்கி 2 பேர் சாவு: கலெக்டர் விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு


காஞ்சீபுரத்தில் விஷவாயு தாக்கி 2 பேர் சாவு: கலெக்டர் விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 26 Aug 2020 3:03 AM GMT (Updated: 26 Aug 2020 3:03 AM GMT)

காஞ்சீபுரத்தில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கலெக்டர் விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

காஞ்சீபுரம் மாவட்டம், முத்தியால்பேட்டை கிராமம் கவரை தெருவில் சாயக்கழிவு நீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட லட்சுமணன் என்பவரை விஷவாயு தாக்கியது. அவரை சுனில்குமார் என்பவர் காப்பாற்ற முயன்றார். 2 பேரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். முத்தியால்பேட்டை பகுதியில் சாயப்பட்டறைகள் இயங்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்ததாக கூறப்படும் நிலையில் சாயக்கழிவு நீர் கால்வாய் அடைப்பை சரி செய்ய கூறியது யார்? என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்தியை, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் (பொறுப்பு) நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து (சூமோட்டோ) விசாரித்தார்.

பின்னர், இதுகுறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ஆகியோர் 4 வாரத்துக்குள் தங்களது விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.


Next Story