அருந்ததியர் பிரிவினருக்கான உள் இட ஒதுக்கீடு விவகாரம்: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் வரவேற்பு


அருந்ததியர் பிரிவினருக்கான உள் இட ஒதுக்கீடு விவகாரம்: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் வரவேற்பு
x
தினத்தந்தி 27 Aug 2020 8:40 AM GMT (Updated: 27 Aug 2020 8:40 AM GMT)

அருந்ததியர் பிரிவினருக்கான உள் இட ஒதுக்கீட்டில் மாநில அரசுகளுக்கு அதிகாரம் என்ற தீர்ப்புக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சென்னை,

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தமிழக அரசு அருந்ததியர் சமூகத்திற்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து கடந்த 2011-ம் ஆண்டில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று சேலத்தை சேர்ந்த ஜே.யசோதா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மாற்றல் மனு ஒன்றை 2015-ம் ஆண்டில் தாக்கல் செய்தார். இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி கடந்த 2015-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வந்தது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி, வினித் சரண், எம்.ஆர்.ஷா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வு கடந்த மாதம் 16-ந் தேதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இந்த நிலையில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான காணொலி அமர்வில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.  

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: “ பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம்  அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அடித்தட்டு மக்களின் வாழ்வில் வளம்சேர்க்க வழிவகுத்துள்ள உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Next Story