எச்.வசந்தகுமார் மறைவு: கவர்னர், அரசியல் தலைவர்கள் இரங்கல்


எச்.வசந்தகுமார் மறைவு: கவர்னர், அரசியல் தலைவர்கள் இரங்கல்
x
தினத்தந்தி 29 Aug 2020 12:00 AM GMT (Updated: 28 Aug 2020 10:41 PM GMT)

எச்.வசந்தகுமார் மறைவுக்கு கவர்னர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார் மறைவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

கவர்னர் பன்வாரிலால் புரோகித்

காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார் மறைவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித், இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யான எச்.வசந்தகுமார் மறைந்த செய்தி எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அவர் ஒரு சிறந்த தொழில் அதிபர், அரசியல்வாதி. போராளியாக பிறந்த அவர் தமிழக மக்களின் நலனுக்காகவே தன்னுடைய வாழ்நாளை செலவிட்டார். அவருடைய மறைவு குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமின்றி, தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.வசந்தகுமார் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

விற்பனையாளராக தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்த எச்.வசந்தகுமார், தனது கடின உழைப்பின் மூலம் வாழ்வில் உயர்ந்தவர். ஏழை, எளிய மக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அரும்பணிகள் ஆற்றியவர். சட்டமன்ற பேரவைக்கு இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, திறம்பட மக்கள் பணியாற்றியவர். எச்.வசந்தகுமார் மறைவு காங்கிரஸ் கட்சியினருக்கும், தொகுதி மக்களுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை நான் வேண்டுகிறேன்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், தொழில் அதிபருமான எச்.வசந்தகுமார் உயிர் இழந்தார் என்ற துயர செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கும் அவர் சார்ந்த இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களில் ஒருவருமான எச்.வசந்தகுமார் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு பெரும் வேதனை அடைந்தேன். அவரது மறைவிற்கு தி.மு.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்த அவரை தொலைபேசியில் அழைத்து உடல் நலம் விசாரித்தேன். விரைவில் வீடு திரும்புவார் என்று நம்பிக்கையுடன் நினைத்திருந்த வேளையில் கொரோனா என்ற கொடிய நோய் அவரை நம்மிடமிருந்து அநியாயமாக பிரித்துச் சென்று விட்டது அதிர்ச்சியளிக்கிறது.

வசந்தகுமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், இலக்கியச் செல்வர் குமரி அனந்தனுக்கும், தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கும் ஆழ்ந்த ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நடிகர் ரஜினிகாந்த்

அருமை நண்பர் வசந்தகுமாரின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கும், அவரைச் சார்ந்த அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

இதே போன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பா.ஜனதா தலைவர் எல்.முருகன், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், கவிஞர் வைரமுத்து, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ஜனதா மாநில துணைத்தலைவர் எம்.என்.ராஜா, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன், சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் ஏ.நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் ஆகியோரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Next Story