மாநில செய்திகள்

கொளத்தூர் மட்டுமல்ல தமிழ்நாடே என் தொகுதி தான் - கொளத்தூரில் நல உதவி வழங்கும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு + "||" + Not only Kolathur but Tamil Nadu is my constituency - MK Stalin's speech at the welfare assistance distribution ceremony in Kolathur

கொளத்தூர் மட்டுமல்ல தமிழ்நாடே என் தொகுதி தான் - கொளத்தூரில் நல உதவி வழங்கும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

கொளத்தூர் மட்டுமல்ல தமிழ்நாடே என் தொகுதி தான் - கொளத்தூரில் நல உதவி வழங்கும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
கொளத்தூர் மட்டுமல்ல, தமிழ்நாடே என் தொகுதிதான் என்று கொளத்தூரில் நடந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டார். கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலுள்ள ஏழை, எளிய 200 மகளிர் பயன்பெறும் வகையில் இலவச தையல் பயிற்சிக் கூடத்தைத் துவக்கி வைத்து பயிற்சி பெறும் மகளிருக்கு பயிற்சி மேற்கொள்ள உபகரணம் வழங்கி கொரோனா தடுப்பு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.


பின்னர் கொளத்தூர் சட்டமன்ற அலுவலகம் அருகில் உள்ள ‘அனிதா அச்சீவர்ஸ் அகாடமி’யில் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கி வைத்து, மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கொரோனா காலத்தில் நாம் ஆற்றவேண்டிய பணியில் இருந்து என்றைக்கும் பின்வாங்கிட மாட்டோம். அது எந்த காலமாக இருந்தாலும். மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் தொடர்ந்து தி.மு.க. இருக்கும் என்பதற்கு அடையாளம்தான் இந்த நிகழ்ச்சி.

இந்த பகுதியில், வேலையில்லாமல் இருக்கும் சகோதரிகளுக்கு எப்படியாவது நம்மால் முடிந்த வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தர வேண்டும் என்பதற்காகத்தான் அனிதா பெயரில் அந்த அகாடமி தொடங்கப்பெற்று, முதற்கட்டமாக 61 பேர் பயிற்சி பெற்று, 59 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இரண்டாவது கட்டமாக 67 பேர் பயிற்சி பெற்று, 59 பேர் வேலைவாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். மூன்றாவது கட்டமாக 75 பேர் பயிற்சி பெற்று 53 பேர் வேலைவாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.

நான்காவது கட்டமாக 68 பேர் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். அடுத்து ஐந்தாவது கட்டமாகத் தயாராகி, பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்று பார்த்தீர்களானால் 88 பேர் பதிவு செய்திருக்கிறார்கள். எனவே இந்த அகாடமி, பயிற்சி நிலையம் சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அனிதாவை உங்களுக்கு அறிமுகம் செய்யத் தேவையில்லை. பள்ளிப்படிப்பில் சிறப்பான மதிப்பெண்கள் எடுத்தும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை என்பதால் மனமுடைந்து வேதனையடைந்து தற்கொலை செய்துகொண்ட மாணவி.

நீட் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், அவர் தற்கொலை செய்துகொள்ளாமல் உயிருடன் இருந்து இந்த கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை செய்துகொண்டிருந்திருப்பார். அவரை ஒரு மருத்துவராக நாம் இன்றைக்குப் பார்த்திருப்போம். ஆனால் அது நடக்கவில்லை. அவருடைய நினைவாகத்தான் இந்த மையத்துக்குப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்த பயிற்சி மையத்தை நான் பார்க்க வரும்போதெல்லாம், இந்தப் பகுதியில் உள்ள தொண்டர்களும், நண்பர்களும் என்னிடத்தில் சொல்வார்கள், பெண்களுக்கு மட்டும் இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறீர்களே, அவர்கள் எல்லாம் திருமணம் செய்து வேறு ஊருக்குப் போய்விடுவார்கள், ஆனால் நாங்கள் இங்கேதான் இருப்போம் என்று அவர்களிடம் சொன்னேன் அந்தப் பெண்கள் எங்கே சென்றாலும் நமக்குத்தான் ஆதரவு கொடுப்பார்கள் என்று. கொளத்தூர் மட்டுமல்ல; தமிழ்நாடே என் தொகுதி தான்.

இப்படி ஒருபுறம் நான் சமாதானம் சொன்னாலும் இங்கிருக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர வேண்டும், அவர்கள் வாழ்க்கையிலும் வசந்தம் வீசவேண்டும் என்று முடிவு செய்து இளைஞர்களுக்கான பயிற்சி மையத்தைத் தொடங்கியிருக்கிறோம். நூறுபேர் பங்கேற்கும் வகையிலான பயிற்சிமையம் தொடங்கப்பட்டிருக்கிறது.

கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து என்பது இன்னும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அரசு குறைத்துச் சொல்கிறது. கொரோனாவுடன் வாழப் பழகுங்கள் என்று அரசு சொல்லி விட்டது. ‘கையைக் கழுவுங்கள்’ என்று சொன்னார்கள். இப்போது நம்மையே கைகழுவி விட்டார்கள். நாமேதான் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். எனவே அனைவரும் எச்சரிக்கையுடன் இருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.