வருகிற 7-ந்தேதி முதல் சென்னை ஐகோர்ட்டில் நேரடியாக வழக்குகள் விசாரணை - நீதிபதிகள் குழு முடிவு


வருகிற 7-ந்தேதி முதல் சென்னை ஐகோர்ட்டில் நேரடியாக வழக்குகள் விசாரணை - நீதிபதிகள் குழு முடிவு
x
தினத்தந்தி 29 Aug 2020 11:45 PM GMT (Updated: 29 Aug 2020 9:10 PM GMT)

வருகிற 7-ந்தேதி முதல் 6 அமர்வுகள் வழக்குகளை நேரடியாக விசாரிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நிர்வாகக்குழு நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர்.

சென்னை,

கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளை மூடப்பட்டு, வழக்குகள் எல்லாம் காணொலி காட்சி மூலமாக விசாரிக்கப்படுகின்றன. ஆனால் இந்த முறையில் வழக்குகள் விசாரிக்கப்படுவதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளதால், ஐகோர்ட்டை திறக்க வேண்டும் என்று வக்கீல்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வக்கீல்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் நிர்வாகக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுப்பையா, எம்.சத்தியநாராயணன், என்.கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, சென்னை ஐகோர்ட்டை திறப்பது குறித்து நீதிபதிகள் ஆலோசனை செய்தனர்.

பின்னர், முதல் கட்டமாக ஐகோர்ட்டு முதல் 6 டிவிசன் பெஞ்சுகள் மட்டும் நேரடியாக வழக்குகளை விசாரிக்க 2 வாரத்துக்கு அனுமதிப்பது. பிற அமர்வுகள் எல்லாம் வழக்கம் போல் காணொலி காட்சி வாயிலாக வழக்குகளை விசாரிக்க வேண்டும். 2 வாரத்துக்கு பின்னர், அனைத்து அமர்வுகளும் நேரடியாக வழக்குகளை விசாரிப்பதா?. அல்லது காணொலி காட்சியை தொடருவதா? என்பது குறித்து முடிவு செய்யலாம் என்று நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர்.

நிர்வாகக் குழு நீதிபதிகளின் இந்த முடிவை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வரவேற்றுள்ளது. இதுகுறித்து பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், “முதல் கட்டமாக 6 டிவிசன் பெஞ்சுகள் வழக்குகளை நேரடியாக விசாரிக்க உள்ளதை வரவேற்கிறோம். இதற்கு வக்கீல்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவார்கள். வழக்கு உள்ள வக்கீல்கள் மட்டுமே ஐகோர்ட்டுகள் செல்வார்கள். அப்போது உலக சுகாதார அமைப்பு வகுத்துள்ள அனைத்து வழிமுறைகளையும் வக்கீல்கள் பின்பற்றுவார்கள்” என்று கூறினார்.

சென்னை ஐகோர்ட்டில்6 அமர்வுகளும், ஐகோர்ட்டு மதுரை கிளையில் 2 அமர்வுகளும் நேரடியாக வழக்குகளை விசாரிக்க உள்ளனர்.

Next Story