மழைநீர் தேங்காமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுங்கள் - மாவட்ட கலெக்டர்களுக்கு, எடப்பாடி பழனிசாமி உத்தரவு


மழைநீர் தேங்காமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுங்கள் - மாவட்ட கலெக்டர்களுக்கு, எடப்பாடி பழனிசாமி உத்தரவு
x
தினத்தந்தி 29 Aug 2020 11:10 PM GMT (Updated: 29 Aug 2020 11:10 PM GMT)

மழைநீர் தேங்காமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுங்கள் என்றும், டெங்கு போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு உகந்த நேரம் இதுதான் என்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆய்வு நடத்தினார். ஆய்வு கூட்டத்தை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

இதுவரை கொரோனா தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரண பணிகளுக்காக அரசு ரூ.7,162 கோடிக்கு மேல் வழங்கியுள்ளது. பொதுமக்களிடம் காய்ச்சல், சளி, வறட்டு இருமல், மூச்சுத்திணறல், உடல் சோர்வு, தலைவலி, நாக்கில் சுவை இழப்பு, மூக்கில் நுகர்வுத் தன்மை இழப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டவுடன் 24 மணி நேரத்திற்குள் மருத்துவமனை செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வை கலெக்டர்கள் ஏற்படுத்த வேண்டும்.

ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையின்போது மூத்த குடிமக்கள் மற்றும் இணை நோய் உள்ளோரின் மாதிரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பரிசோதனைக்கு எடுத்துக்கொண்டு, விரைந்து முடிவுகளை அறிவிக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை குறித்த நிலையான வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா? என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

கொரோனா சிறப்பு மையங்களை அவ்வப்போது கலெக்டர்கள் ஆய்வு செய்ய வேண்டும். குறைவான இறப்பு விகிதத்தை தமிழகம் கொண்டு இருந்த போதிலும், அதை மேலும் குறைக்க நடவடிக்கைகளை கலெக்டர்கள் தீவிரப்படுத்த வேண்டும்.

தற்போது, பருவமழை காலம் தொடங்க உள்ளது. பருவமழை காலம் ஆரம்பிக்கும் முன்னதாகவே நகர்ப்புற, ஊரக பகுதிகளில் குடிநீர், சாலை வசதி, திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி, பருவ கால சவால்களை திறம்படி கையாள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

பருவ மழைக்கு முன்னதாகவே நீர்நிலை உட்கட்டமைப்புகளான கால்வாய்கள், அணைக்கட்டுகளின் கதவுகள், மற்றும் கரைகளை கண்காணித்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. விரைவில் பருவமழையும் தொடங்க உள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழைநீர் தேங்காமல் இருக்க தகுந்த முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மழை நீர்வடிகால் பகுதிகளை தூய்மைப்படுத்தி, மழைநீர் வடிந்து செல்ல தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லை என்றால், டெங்கு கொசு உருவாக வாய்ப்பு ஏற்படும். டெங்கு போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுப்பதற்கு உகந்த நேரம் இதுதான்.

11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கான கட்டுமான பணிகளை கலெக்டர்கள் கள ஆய்வு செய்து துரிதப்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் பொதுமக்களுக்கும், செம்மையான முறையில் பணியாற்றும் அனைத்து அரசு அலுவலர்களுக்கும் நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story