தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் 6 ஆயிரத்தை தாண்டியது; ஒரே நாளில் 1,014 முதியவர்களுக்கு தொற்று


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் 6 ஆயிரத்தை தாண்டியது; ஒரே நாளில் 1,014 முதியவர்களுக்கு தொற்று
x
தினத்தந்தி 29 Aug 2020 11:15 PM GMT (Updated: 29 Aug 2020 11:15 PM GMT)

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் 6 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1,014 முதியவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 78 ஆயிரத்து 973 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,881 ஆண்கள், 2,471 பெண்கள் என மொத்தம் 6,352 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிநாடுகளில் இருந்து வந்த 6 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 20 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 236 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1,014 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,285 பேரும், கோவையில் 491 பேரும், சேலத்தில் 432 பேரும் குறைந்தபட்சமாக தர்மபுரியில் 18 பேரும், நீலகிரியில் 17 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 15 ஆயிரத்து 590 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 59 பேரும், தனியார் மருத்துவமனையில் 28 பேரும் என 87 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர், கடந்த 19-ந்தேதி உடல்நிலை சரி இல்லாத நிலையில் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நேற்று உயிரிழந்தவர்களில், சென்னையில் 17 பேரும், கோவையில் 9 பேரும், கன்னியாகுமரி, வேலூரில் தலா 6 பேரும், சேலத்தில் 5 பேரும், செங்கல்பட்டு, மதுரையில் தலா 4 பேரும், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், திருவள்ளூர், நெல்லையில் தலா 3 பேரும், திருச்சி, திருவண்ணாமலை, திருப்பூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, திண்டுக்கலில் தலா இருவரும், அரியலூர், கடலூர், ஈரோடு, நாகப்பட்டினம், தென்காசி, தஞ்சாவூர், திருப்பத்தூர், தேனி, திருவாரூர், தூத்துக்குடி, விழுப்புரம், விருதுநகரில் தலா ஒருவரும் என 29 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 7 ஆயிரத்து 137 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 6 ஆயிரத்து 45 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரையில் 3 லட்சத்து 55 ஆயிரத்து 727 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 52 ஆயிரத்து 726 பேர் உள்ளனர். தமிழகத்தில் மேலும் 3 தனியார் நிறுவனத்துக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 63 அரசு நிறுவனங்களும், 86 தனியார் நிறுவனங்களிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story