கொரோனா தொற்று தடுப்பு: மருத்துவ நிபுணர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை


கொரோனா தொற்று தடுப்பு: மருத்துவ நிபுணர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
x
தினத்தந்தி 29 Aug 2020 11:31 PM GMT (Updated: 29 Aug 2020 11:31 PM GMT)

தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு பற்றி மருத்துவ நிபுணர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

ஜெனீவா உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்.) விஞ்ஞானியும், சென்னை தேசிய தொற்றுநோய் நிலைய துணை இயக்குநருமான டாக்டர் பிரதீப் கவுர், உலக சுகாதார அமைப்பின் முதுநிலை மண்டல குழு தலைவர் டாக்டர் கே.என்.அருண்குமார், ஈரோட்டில் இருந்து இந்திய மருத்துவ கழகத்தின் தலைவர் டாக்டர் சி.என்.ராஜா, வேலூரில் இருந்து கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி இயக்குனர் டாக்டர் ஜெ.வி.பீட்டர் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்களுடன் காணொலி காட்சி மூலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

நேற்று மாலை 4 மணியளவில் தொடங்கிய இந்த கூட்டம் 6 மணிக்கு நிறைவடைந்தது. 2 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்றின் நிலை பற்றி விவாதிக்கப்பட்டது. தொற்றை தடுக்க கூடுதல் பரிசோதனை, அறிகுறி தெரிந்தவுடன் சிகிச்சைக்கு வரவழைப்பது போன்ற ஆலோசனைகளை மருத்துவ நிபுணர்கள் வழங்கினர்.

இந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Next Story