செப்டம்பரிலும் ஊரடங்கு நீடிக்குமா? - எடப்பாடி பழனிசாமி இன்று அறிவிப்பு வெளியிடுகிறார்


செப்டம்பரிலும் ஊரடங்கு நீடிக்குமா? - எடப்பாடி பழனிசாமி இன்று அறிவிப்பு வெளியிடுகிறார்
x
தினத்தந்தி 29 Aug 2020 11:47 PM GMT (Updated: 29 Aug 2020 11:47 PM GMT)

வரும் செப்டம்பர் மாதத்திலும் ஊரடங்கு நீடிக்குமா? என்பது தொடர்பான அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுகிறார்.

சென்னை,

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு இம்மாதம் 31-ந் தேதியோடு (நாளை) முடிவடைகிறது. வரும் மாதமான செப்டம்பரிலும் ஊரடங்கை நீடிக்கலாமா? என்னென்ன தளர்வுகளை அனுமதிக்கலாம்? என்பது பற்றி ஆலோசனை நடத்த அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் மத்திய அரசு சில தளர்வுகளுடன் செப்டம்பரிலும் ஊரடங்கை நீடித்து உத்தரவிட்டுள்ளது. அதையும் தமிழக அரசு கருத்தில் கொண்டுள்ளது. தற்போது இ-பாஸ் மற்றும் பொது போக்குவரத்து தொடர்பாக மக்களிடம் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. பொது போக்குவரத்தை மண்டலங்களுக்கு உள்ளேயாவது அரசு அனுமதிக்குமா? என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதுபோல, இ-பாஸ் முறையில் தளர்வுகள் செய்யப்படுமா? அல்லது மத்திய அரசு உத்தரவிட்டதுபோல இ-பாஸ் முறை முற்றிலும் ரத்தாகுமா? என்ற எதிர்பார்ப்பிலும் மக்கள் உள்ளனர். இவற்றுக்கு விடையாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவிப்பு வெளியிடுகிறார். செப்டம்பர் மாதமும் ஊரடங்கு நீடிக்க அதிக வாய்ப்புள்ள நிலையில், பல தளர்வுகள் நிச்சயமாக அறிவிக்கப்பட உள்ளன.

Next Story