காங்கிரஸ் கட்சிக்கு ‘தலைவரை தேர்ந்தெடுப்பதில் அவசர தேவை இல்லை’ - முன்னாள் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் பேட்டி


காங்கிரஸ் கட்சிக்கு ‘தலைவரை தேர்ந்தெடுப்பதில் அவசர தேவை இல்லை’ - முன்னாள் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் பேட்டி
x
தினத்தந்தி 30 Aug 2020 8:00 PM GMT (Updated: 30 Aug 2020 7:41 PM GMT)

காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை தேர்ந்தெடுப்பதில் அவசர தேவை இல்லை என்று முன்னாள் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் கூறினார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவர் தேவை, அமைப்பு ரீதியில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என குரல் கொடுத்து மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியது, கட்சிக்குள் புயல் வீசச்செய்தது.

இதையொட்டி காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சல்மான் குர்ஷித், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

கட்சித்தலைவர் சோனியாவுக்கு எழுதிய கடிதத்தில் கையெழுத்து பெற என்னை நாடி இருந்தால், நான் கையெழுத்து போட்டிருக்க மாட்டேன். குலாம் நபி ஆசாத், காஷ்மீரை சேர்ந்த மூத்த தலைவர். கட்சியில் தேர்தல்கள் நடைபெறவில்லை, ஆனாலும் கட்சி வளர்ந்து வருகிறது. தற்போது கட்சியில் மாற்றம் தேவை என அவர் விரும்பி இருக்கலாம். ஒரு மூத்த தலைவராக அவர் கூறுவதை கட்சி சிந்திக்கும்.

சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய தலைவர்கள் எப்போதும் அவரை அணுகக்கூடியவர்கள். அவருக்கு கடிதம் எழுதுவதற்கு பதிலாக நேரில் அணுகி இருக்கலாம். கடிதம் எழுதிய முக்கிய நபர்கள், கட்சியின் உயர் மட்டத்தை சேர்ந்தவர்கள். இதை கட்சிக்குள் விவாதித்து இருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும் என சோனியா காந்தி சுட்டிக் காட்டி உள்ளார்.

கட்சிக்கு ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து விவாதம் இருப்பது தெரிகிறது. அதை சாத்தியமாகிறபோது உரிய நேரத்தில் செய்ய முடியும். என்னைப் போன்றவர்களுக்கு ஏற்கனவே தலைவர்கள் உள்ளனர். சோனியா காந்தி எங்களுக்கு தலைவர். ராகுல் காந்தி, எங்களுக்கு தலைவர். என்னை பொறுத்தமட்டில் தலைவரை தேர்ந்தெடுப்பதில் அவசர உணர்வு இல்லை. தலைவரை தேர்ந்தெடுப்பது எப்போது முடியுமோ அப்போது அது நடக்கட்டும். ஆனால் அதற்கான வானம் கீழே இடிந்து விழுவதை நான் காணவில்லை. அதில் என்ன அவசரம் இருக்கிறது என்பது எனக்கு தெளிவாக தெரியவில்லை.

நாங்கள் பகுதி நேர தலைவரை பெற்றிருக்கவில்லை. முழு நேர தலைவர்தான் இருக்கிறார். முழு நேர தலைவர்தான் இடைக்கால தலைவர். இடைக்கால தலைவர், சாதாரண நபர் அல்ல. அவர் நீண்ட காலம் பதவி வகித்து வந்த தலைவர். நாம் அவரை நம்ப வேண்டும். இது பொருத்தமானது என அவர் நினைக்கிறபோது நடவடிக்கை எடுக்கட்டும்.

கட்சிக்குள் கத்திகள் வெளிப்பட்டுள்ளனவே, கட்சியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கேட்கிறீர்கள். பேனாக்கள் வெளியே வந்துள்ளன. அதில் என்ன பிரச்சினை இருக்கிறது? நிச்சயமாக பேனாக்களால் எழுதப்பட்ட சொற்கள், புண்படுத்தக்கூடும். அது நடந்தது. ஆனால் ரத்தம் வர வைக்கவில்லை. மை மட்டும்தான். அதனுடன் நாம் வாழ முடியும். அந்த மை விரைவில் மங்கிப்போய் விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story