சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்


சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்
x
தினத்தந்தி 30 Aug 2020 11:13 PM GMT (Updated: 30 Aug 2020 11:13 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

சென்னை,

கொரோனா தொற்று காரணமாக கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வை தவிர, மற்ற அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இறுதி செமஸ்டர் தேர்வு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருந்ததால், அதுபற்றி எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது.

இந்தநிலையில் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு இறுதி செமஸ்டர் தேர்வை நடத்த அறிவுறுத்தியது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பைத் தொடர்ந்து தமிழக அரசு கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வை எப்போது நடத்த இருக்கிறது? என்பது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி இறுதி செமஸ்டர் தேர்வு நடத்தப்படும். கோர்ட்டின் தீர்ப்பை பின்பற்றி தான் ஆகவேண்டும். தேர்வை எப்படி? எப்போது? நடத்தலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். ஆலோசனை முடிந்தபிறகு தேர்வு குறித்து அறிவிக்கப்படும்.

புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய உயர் கல்வித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அந்த குழு குறித்த முழுமையான அறிவிப்பு இன்னும் 2 நாட்களில் வெளியிடப்படும்.

இவ்வாறு கே.பி. அன்பழகன் கூறினார்.

Next Story