அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க தமிழக அரசு அனுமதி - வழிகாட்டு நெறிமுறைகள்


அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க தமிழக அரசு அனுமதி - வழிகாட்டு நெறிமுறைகள்
x
தினத்தந்தி 31 Aug 2020 1:17 PM GMT (Updated: 31 Aug 2020 1:17 PM GMT)

நாளை முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக பல்வேறு விதிமுறைகளை அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

சென்னை

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டபோது அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. பின்னர், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டபோது, கிராமப்புறங்களில் சிறிய கோயில்களை திறக்க அனுமதிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் நகராட்சிப் பகுதிகள், மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய கோயில்கள் திறக்க அனுமதிக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் நாளை வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து வருபவர்களை அனுமதிக்க கூடாது எனவும் முகக் கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

65 வயதுக்கு மேற்பட்டோர், 10 வயதுக்கு உட்பட்டோர் வழிபாட்டுத் தலங்களுக்கு வருவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும், நுழைவுவாயிலில் கிருமி நாசினி வழங்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும், பக்தர்கள் கை, கால்களை சுத்தம் செய்த பிறகு உள்ளே நுழைவதை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நோய் அறிகுறி இல்லாத பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும், கொரோனா விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும், பக்தர்கள் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும், பக்தர்கள் வரிசையில் நிற்கும் வகையில் வட்டமிட வேண்டும், உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கும்  தனித்தனி வாயில்களை பயன்படுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 சாமி சிலைகளை தொட பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும், கோயிலில் நடைபெறும் உற்சவங்களின் போது பக்தர்களுக்கு அனுமதி கிடையாது எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. பஜனை குழு, பக்தி இசைக்குழுக்களை அனுமதிக்க கூடாது.

விபூதி, குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்க கூடாது எனவும், வழிபாட்டு தலங்களின் தரைப்பகுதியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story