இன்று முதல் திறப்பு: வழிபாட்டு தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் என்ன?


இன்று முதல் திறப்பு: வழிபாட்டு தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் என்ன?
x
தினத்தந்தி 1 Sept 2020 5:45 AM IST (Updated: 1 Sept 2020 5:45 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இன்று முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட உள்ளன. வழிபாட்டு தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இறை வழிபாட்டு தலங்களில் நேற்று சுத்தம் செய்து, சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்தது. இதற்கான பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்கிடையே வழிபாட்டு தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் க.சண்முகம் பிறப்பித்து உள்ளார்.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தடை செய்யப்பட்ட பகுதியிலிருந்து வருபவர்களுக்கு அனுமதி மறுப்பதுடன், பக்தர்கள் முககவசம் அணிந்து வருவது கட்டாயமாகும். பக்தர்களுக்கு கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யவேண்டும். உடல் வெப்பநிலை கண்டறியும் கருவி மூலம் பரிசோதனை செய்ய வேண்டும். கோவில்களில் 1,075 சதுர அடி பரப்பளவில் 20 பக்தர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது. பெரிய கோவில்களில் பக்தர்களுக்கு ஆதார் எண், அடையாள அட்டை போன்றவற்றின் அடிப்படையில் செயலிகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் தரிசனத்திற்கு டோக்கன் வழங்கலாம்.

கோவிலுக்குள் 6 அடி சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களையும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களையும், கர்ப்பிணிகளையும் வீடுகளில் இருந்தே வழிபட கோவில் நிர்வாகங்கள் அறிவுறுத்த வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும்.

தேங்காய், பழம், பூ ஆகியவற்றை பக்தர்கள் கொண்டு வர அனுமதிக்கவேண்டாம். பூஜைகளிலும், அபிஷேக நேரங்களிலும் பக்தர்களும், உபயதாரர்களும் அமர்ந்து சாமி தரிசனம் செய்ய கூடாது. கோவில்களின் உட்புறம் பக்தர்கள் அங்கப்பிரட்சனம் செய்ய ஊக்குவிக்க வேண்டாம். தங்கும் விடுதிகள் மற்றும் அறைகள் ஒதுக்கப்படக்கூடாது. இயல்புநிலை திரும்பும் வரை திருவிழாக்கள், பக்தர்கள் பங்கேற்புடன் சாமி ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை. கோவில் வளாகத்தில் ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கு ஒரு முறை ‘சோடியம் ஹைபோகுளோரைட்’ கரைசல் தெளித்து சுத்தப்படுத்த வேண்டும்.

கோவில்களில் பஜனை மற்றும் பாட்டு பாடுவதற்கு அனுமதி இல்லை. பதிவு செய்யப்பட்ட ஆன்மிக பாடல்களை ஒலிபரப்பலாம். அதேபோல் தெப்பக்குளங்களுக்கு செல்ல பக்தர்களை அனுமதிக்க வேண்டாம். கடைகளில் பிரசாதம் விற்பனை செய்யலாம். கோவில் வளாகத்தில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. கோவில்களில் திருமணங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் 50 பேருக்கு மிகாமல் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நடத்த வேண்டும்.

தேவாலயங்களில் ஞானஸ்நானம் கொடுப்பதை வீடுகளிலேயே செய்யலாம். ஒவ்வொருவருக்கும் இடையே 2 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். 100 சதுர மீட்டர் இடைவெளியில் அதிகபட்சம் 20 பேர் மட்டுமே இருக்கலாம். பூக்கள் போன்றவற்றை தேவாலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கக்கூடாது. கோவில் மணி போன்ற பொருட்களை பக்தர்கள் கையாளக்கூடாது. பாட்டுப் புத்தகங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

பாட்டுக்குழுவினரின் பாடலை தவிர்த்துவிட்டு, பாடலை கருவிகள் மூலம் இசைக்கவேண்டும். புனித நீர் தெளிப்பு உள்ளிட்ட உடலை தொடும் சடங்காச்சாரங்களை செய்யக்கூடாது. ஆலய வளாகத்தில் திருமணம் நடந்தால் 50 பேருக்கு மேல் கூடக்கூடாது. ஒரு நேரத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி மட்டுமே நடத்த வேண்டும். ஆலய வழிபாடு தொடங்குவதற்கு முன்பும், முடிந்த பின்பும் யாரும் கூட்டம் கூடி பேசக்கூடாது. ஆலயத்தின் உள்ளேயும், வெளியேயும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

பள்ளிவாசல்களில் தொழுகையின்போது பயன்படுத்த விரிப்புகளை தாங்களே கொண்டு வரவேண்டும். பள்ளிவாசல்களில் உள்ள பொதுவான விரிப்புகள், தொப்பிகள் மற்றும் பிற பொருட்களை பயன்படுத்தக்கூடாது. பிரார்த்தனையின் போது நெருக்கமாக நிற்பதை தவிர்த்து 2 மீட்டர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் ஜூம்மா தொழுகையின்போது மக்கள் நெருக்கடி இல்லாமல் தொழுகை நடத்த பள்ளிவாசல் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இயல்பு நிலை திரும்பும் வரை பள்ளிவாசல்களில் மதக்கூட்டங்கள் நடத்துவது, மத போதனை வகுப்புகள் நடத்துவது போன்றவற்றுக்கு அனுமதிக்கக்கூடாது. தர்காக்களில் உள்ள புனித பகுதிக்கு மலர்கள், துணிகள் ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்த அனுமதிக்க கூடாது. தர்கா பகுதிக்குள் சமூக இடைவெளியை பின்பற்றி நடந்து கொள்ளவேண்டும். அங்கு வரும் பக்தர்களுக்கு சாப்பாடு மற்றும் உணவுப்பொருட்கள் எதுவும் வினியோகிப்பதை தவிர்க்கவேண்டும்.

மேற்கண்ட அம்சங்கள் வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளன.

இதேபோன்று சீக்கிய குருத்வாரா, புத்தவிகார், ஜெயின் கோவில்களில் பின்பற்றப்படவேண்டிய வழிமுறைகளும் தலைமைச் செயலாளர் க.சண்முகம் பிறப்பித்து உள்ளார்.

Next Story