கொரோனாவில் இருந்து மீண்ட தீயணைப்பு வீரர்கள் பிளாஸ்மா தானம்


கொரோனாவில் இருந்து மீண்ட தீயணைப்பு வீரர்கள் பிளாஸ்மா தானம்
x
தினத்தந்தி 1 Sep 2020 8:38 PM GMT (Updated: 1 Sep 2020 8:38 PM GMT)

தமிழக தீயணைப்பு துறையை சார்ந்த 29 வீரர்கள் தங்களது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை தானம் செய்தனர்.

சென்னை,

தமிழகத்தில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த பிளாஸ்மா வங்கியில் கொரோனா நோய் தொற்றில் இருந்து மீண்ட பலர் பிளாஸ்மா தானம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்ட தீயணைப்பு வீரர்கள் பிளாஸ்மா தானம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் தமிழக தீயணைப்பு துறையை சார்ந்த 29 வீரர்கள் தங்களது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை தானம் செய்தனர். இந்த நிகழ்வை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் தீயணைப்பு துறை இயக்குனர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோர் பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து பிளாஸ்மா தானம் செய்த தீயணைப்பு வீரர்களை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பாராட்டி, அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். அதன்பின்னர் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் பேசுகையில், “போலீசாரை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர். இதுவரை 140 பேரிடம் இருந்து பிளாஸ்மா தானமாக பெறப்பட்டு, 225 பேருக்கு பிளாஸ்மா தானமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பிளாஸ்மா வங்கி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.” என்று கூறினார்.

இந்த நிகழ்வின்போது தீயணைப்பு துறை வடமண்டல இணை இயக்குனர் என்.பிரியா ரவிசந்திரன், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் தேரணிராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story