தமிழகத்தில் கோவில்கள், வணிக வளாகங்கள், நூலகங்கள் திறப்பு; பஸ்கள் ஓடியதால் இயல்புநிலை திரும்பியது - பொதுமக்கள் மகிழ்ச்சி


தமிழகத்தில் கோவில்கள், வணிக வளாகங்கள், நூலகங்கள் திறப்பு; பஸ்கள் ஓடியதால் இயல்புநிலை திரும்பியது - பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 2 Sept 2020 5:45 AM IST (Updated: 2 Sept 2020 2:36 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 5 மாதங்களுக்கு பிறகு கோவில்கள், வணிக வளாகங்கள், நூலகங்கள் நேற்று திறக்கப்பட்டன. அரசு பஸ்கள் மீண்டும் ஓடத் தொடங்கியதால் இயல்புநிலை திரும்பி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னை,

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25-ந்தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. எனினும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், ஊரடங்கு காலத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுவந்தன. தற்போது ஊரடங்கு தொடர்ந்தாலும், இ-பாஸ் நடைமுறை ரத்து, மாவட்டங்களுக் குள் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி, அனைத்து கோவில்கள், வணிக வளாகங்கள், நூலகங்கள் திறப்பு என பல்வேறு முக்கிய தளர்வுகள் வழங்கப்பட்டன.

இந்த தளர்வுகள் எல்லாம் நேற்று முதல் அமலுக்கு வந்தன. மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி வைத்திருந்த இ-பாஸ் நடைமுறை விலக்கிக்கொள்ளப்பட்டதால், மாவட்டங்களுக்கு இடையேயான வாகன போக்குவரத்து அதிகரித்தது. சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதை காணமுடிந்தது. மக்களின் முகத்திலும் மகிழ்ச்சியை காண முடிந்தது.

சென்னையில் 160 நாட்களாக முடங்கிக் கிடந்த மாநகர பஸ் போக்குவரத்து சேவை நேற்று தொடங்கியது. இதற் காக பணிமனைகளில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்ட 3 ஆயிரத்து 300 பஸ்கள் நேற்று காலை 5 மணி முதல் போக்குவரத்தை தொடங்கின. இதனால், மயான அமைதியாக கிடந்த பஸ் நிலையங்கள் பயணிகள் நடமாட்டத்தால் புத்துயிர் பெற்றன. முககவசம் அணிந்த பயணிகள் மட்டுமே பஸ்களில் ஏற அனுமதிக்கப்பட்டனர். அதுவும் ஏறுவதற்கு பின்புற வழியையும், இறங்குவதற்கு முன்புற வழியையும் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டிருந்தது.

பஸ்சில் ஏறிய பயணிகள், பக்கவாட்டில் வைக்கப்பட்டு இருந்த கிருமிநாசினியை கைகளில் தடவி சுத்தம் செய்தபின்னரே இருக்கைகளில் அமர அனுமதிக்கப்பட்டனர். பஸ் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் முக கவசம் அணிந்து இருந்ததுடன் கையுறையும் அணிந்து இருந்தனர். என்னதான் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை மாநகர பஸ்களில் மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும் மக்களிடம்ஒருவித அச்ச உணர்வு தென்பட்டது. இதனால், பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.

கொரோனா பரவலால் கோவில்களுக்கும் பூட்டுப்போடும் நிலை உருவானது. கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை நேற்று விலக்கிக்கொள்ளப்பட்டதால், வழிபாட்டு தலங்களில் பக்தி மணம் கமழ்ந்தது. மக்களும் மகிழ்ச்சியுடன் கோவில்களுக்கு வந்து இருந்தனர். பக்தர்களின் கூட்டம் குறைவாக தான் இருந்தது. அரசு அறிவுறுத்தியபடி, கோவில்களிலும் கொரோனா முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பக்தர்கள் உடல் வெப்ப (தெர்மல் ஸ்கேனர்) பரிசோதனைக்கு பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். கைகளில் கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது. முககவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். முக கவசம் அணியாமல் வந்தவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. தேவாலயங்கள், மசூதிகளிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. வடபழனி முருகன் கோவில் அருகே குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறுவதால் பக்தர்கள் கோவிலுக்குள் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, நேற்று அந்த கோவில் திறக்கப்படவில்லை. இன்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு வடபழனி கோவில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு ‘ஷாப்பிங்’ அனுபவத்துடன் பொழுது போக்கு தலமாக வணிக வளாகங்கள் திகழ்கின்றன. கொரோனா பரவலால் வணிக வளாகங்கள் இழுத்து சாத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அதுவும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், குளிர்சாதன வசதி பயன்படுத்தக்கூடாது என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால், வணிக வளாகங்களில் எதிர்பார்த்த அளவு மக்கள் கூட்டம் இல்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆள் நடமாட்டம் இருந்ததை காணமுடிந்தது.

இதனால், நீண்ட நாட்களுக்கு பிறகு கடைகளை திறந்த வியாபாரிகளுக்கு, “கடை விரித்தும் கொள்வார் இல்லை” என்ற வருத்தமான நிலையே ஏற்பட்டது. வணிக வளாகங்களிலும் தெர்மல் சோதனை, கிருமிநாசினி தெளிப்பு போன்ற அரசு வழிகாட்டு நெறிமுறைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டன.

இந்த ஊரடங்கு காலத்தில், நூலகங்களும் மூடப்பட்டு கிடந்தன. தற்போது, தனி நூலகங்கள் தவிர்த்து, பொது நூலகங்கள் நேற்று முதல் திறக்கலாம் என்று அரசு அனுமதியளித்தது. அதன்படி பொது நூலகங்கள் திறக்கப்பட்டன. அங்கும் தெர்மல் பரிசோதனை, கிருமிநாசினி தெளிப்புக்கு பின்னரே புத்தகப் பிரியர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

தமிழகத்தின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய பாரம்பரிய நூலகமான சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகத்தில் ஐ.ஏ.எஸ். படிப்பு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பத்திரிகைகள் வாசிப்பதற்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை. உறுப்பினர்கள் புத்தகங்களை ஒப்படைக்க அனுமதிக்கப்பட்ட அதேவேளையில் புத்தகங்களை எடுக்க அனுமதிக்கப்படவில்லை. தங்களுக்கு தேவையான புத்தகத்தின் பெயரை தெரிவித்தால் ஊழியர்களே புத்தகத்தை எடுத்து வந்து கொடுத்தனர்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, தமிழகத்தில் பஸ் போக்குவரத்து தொடங்கியதால், பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், ஓட்டல்கள், டீக்கடைகள் உள்ளிட்டவைகளில் விற்பனை கூடியுள்ளது. இன்னும் ரெயில்கள் ஓடத்தொடங்கினால், இயல்புநிலை முழுமையாக திரும்பும் என்று வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Next Story