சென்னை வருவோர் இனி தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள்; கொரோனா பாதிக்கப்பட்டவர் வீடுகளில் தகரம் அடிக்கும் முறை நிறுத்தம்


சென்னை வருவோர் இனி தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள்; கொரோனா பாதிக்கப்பட்டவர் வீடுகளில் தகரம் அடிக்கும் முறை நிறுத்தம்
x
தினத்தந்தி 2 Sept 2020 5:00 AM IST (Updated: 2 Sept 2020 4:45 AM IST)
t-max-icont-min-icon

பிற மாவட்டங்களில் இருந்து சென்னை வருவோருக்கு இனி தனிமைப்படுத்தும் முறை கிடையாது என்றும், சென்னை வருவோருக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்யப்படும் என்றும் மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கமிஷனர் கோ.பிரகாஷ் கூறியதாவது:-

பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் விதமாக ஊரடங்கில் மேலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, தொழில்களும், பொது போக்குவரத்து தொடங்கவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 11 லட்சத்தை நெருங்குகிறது. பரிசோதனை எண்ணிக்கை எக்காரணம் கொண்டும் குறையாது.

பணி இடங்களில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும். இதுவரை 35 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 21 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

பிற மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் நபர்களை தனிமைப்படுத்தும் முறை இனி கிடையாது. வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

தொடர்ந்து 3 மாத காலத்துக்கு பொதுமக்கள் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தால் தான் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்கு முழுமையான வெற்றி கிடைக்கும். முககவசம், சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்.

ஐ.சி.எம்.ஆர். மற்றும் என்.ஐ.இ இணைந்து ஜூன் மாதம் 18-ந்தேதி முதல் ஜூலை மாதம் 28-ந்தேதி வரை, சென்னையில் 12 ஆயிரத்து 600 பேரை தேர்வு செய்து, அவர்களது ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்தது. அதில் 21.5 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது.

இதில் அதிகபட்சமாக தண்டையார்பேட்டை மண்டலத்தில் 44.5 சதவீதம், ராயபுரம் மண்டலத்தில் 34.4 சதவீதம், திருவொற்றியூர் மண்டலத்தில் 31.6 சதவீதம், தேனாம்பேட்டையில் 29.4 சதவீதம், அண்ணாநகரில் 25.2 சதவீதம், மணலியில் 24.1 சதவீதம் உள்பட அனைத்து மண்டலங்களிலும் சேர்த்து 21.5 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியின் தன்மையை கொண்டு, அந்தந்த மண்டலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உதவியாக இருக்கிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறையின் படி சென்னையில் ஒரு நாளைக்கு 1,500 பேருக்கு பரிசோதனை செய்தால் போதும். ஆனால் சென்னையில் நாள் ஒன்றுக்கு 13,500 ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

பரிசோதனை செய்யப்படுபவர் களில் ஒரு நாளைக்கு 9 சதவீதம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. இதனை 5 சதவீதமாக குறைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். நேற்று (நேற்று முன்தினம்) முதல் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் தகரம் அடிக்கும் முறை நிறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story