வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானங்களில் வருபவர்கள் முகாம்களில் தனிமைப்படுத்தும் முறை ரத்து
வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானங்களில் வருபவர்கள் முகாம்களில் தனிமைப்படுத்தும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
கொரோனா வைரஸ் ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்கள், மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சிறப்பு விமானங்களில் அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு முகாம்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து புறப்படுவதற்கு 4 நாட்களுக்கு முன்பு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து தொற்று இல்லை என்று சான்றிதழ்களுடன் வருபவர்கள் நேரடியாக வீடுகளுக்கு சென்று தனிமைப்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் இந்த விதிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை மட்டும் அமல்படுத்தவில்லை.
இந்த நிலையில் மத்திய அரசின் தளர்வுகளுடன் கூடிய தனிமைப்படுத்துதல் திட்டம் நேற்று முதல் சென்னை விமான நிலையத்தில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானங்களில் வருபவர்கள் முகாம்களில் தனிமைப்படுத்தும் முறை ரத்து செய்யப்பட்டு உள்ளது. நேற்று 134 பேருடன் குவைத்தில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்தவர்களில் ஏற்கனவே பரிசோதித்து மருத்துவ சான்றிதழ்களுடன் வந்தவர்களின் கைகளில் ரப்பர் ஸ்டாம்பு முத்திரையிட்டு வீடுகளுக்கு சென்று தனிமைப்படுத்த அனுப்பி வைத்தனர்.
சான்றிதழ்கள் இல்லாமல் வந்தவர்களுக்கு மட்டும் சென்னை விமான நிலையத்திலேயே கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் கைகளிலும் ரப்பர் ஸ்டாம்பு முத்திரைகள் குத்தப்பட்டு அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டனர். விமான நிலையத்திலேயே சிறப்பு கவுண்ட்டர்கள் அமைத்து அனைவருக்கும் இ-பாஸ்கள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story