ஆன்லைன் வகுப்புகளை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


ஆன்லைன் வகுப்புகளை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 Sep 2020 7:26 PM GMT (Updated: 3 Sep 2020 7:26 PM GMT)

ஆன்லைன் வகுப்புகளை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னை,

தமிழ்நாட்டில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களின் அறிவை வளர்ப்பதற்கு மாறாக, மன அழுத்தத்தையும், தற்கொலை எண்ணத்தையும் வளர்த்து வருகின்றன என்பதை கடந்த சில நாட்களில் நடந்த நிகழ்வுகள் உறுதிசெய்துள்ளன. சுகமாக இருக்கவேண்டிய கல்வியை சுமையாக மாற்றிவரும் ஆன்லைன் வகுப்புகள் ஊக்குவிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

கல்வியில் ஏற்றத்தாழ்வுகளையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தும் எந்தமுறையும் தேவையற்றது தான். தவிர்க்கமுடியாத பட்சத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு மட்டும் ஒருநாளைக்கு அதிகபட்சமாக 2 மணி நேரம் ஆன்லைன் வகுப்புகளை அனுமதிக்கலாம். மற்ற வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகளை தமிழக அரசு தடைசெய்யவேண்டும்.

அதற்கு பதிலாக பாடத்திட்டக்குறைப்பு தொடர்பாக வல்லுனர் குழு கடந்த ஜூன் 10-ந்தேதி தாக்கல்செய்த அறிக்கையை ஆய்வுசெய்து பாடத்திட்டத்தை நடப்பாண்டிற்கு மட்டும் 50 சதவீதம் வரை குறைக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என வலியுறுத்துகிறேன். தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இதை கவனத்தில்கொண்டு, மாணவர்களை பாதிக்கும் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடைவிதிப்பார் என நம்புகிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story