தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் எழுச்சி பெறுகிறதா? - பத்திரப்பதிவு அலுவலகங்களில் வருவாய் அதிகரிப்பு


தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் எழுச்சி பெறுகிறதா? - பத்திரப்பதிவு அலுவலகங்களில் வருவாய் அதிகரிப்பு
x
தினத்தந்தி 4 Sept 2020 1:15 AM IST (Updated: 4 Sept 2020 1:10 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் துறை எழுச்சிபெறுகிறதோ? என்று எண்ணும் அளவுக்கு பத்திர பதிவு அலுவலகங்களில் வருவாய் அதிகரித்து இருக்கிறது.

சென்னை,

தமிழக அரசுக்கு பத்திர பதிவுத்துறை மூலம் ஆண்டுக்கு கிட்டத்தட்ட ரூ.12 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் கிடைத்து வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஆன்லைனில் பத்திரங்களை பதிவுசெய்யும் நடைமுறை கொண்டுவரப்பட்டது.

அந்தமுறை வந்தபிறகு, சாதாரண மக்களும் தங்களுடைய சொத்துகளை எளிதாக பதிவுசெய்து கொள்ள முடிந்தது. போலிபத்திரங்கள் தயாரிக்கப்படுவது தடுக்கப்பட்டது. எந்தவித முறைகேடுகள் இல்லாமல், துரிதமாக சம்பந்தப்பட்ட நபருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இதனால் இந்த ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை பொதுமக்கள் பலரும் வரவேற்று வருகின்றனர்.

அந்த வகையில் ஆன்லைன் பத்திரப்பதிவு தமிழகம் முழுவதும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனால் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து ஜூலை மாதம் வரை பத்திரப் பதிவுத்துறையில் குறைவான அளவில் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன. அதன் பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் வெளியே வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதும், பத்திர பதிவுத்துறையை பெரும்பாலான மக்கள் நாடி இருக்கின்றனர்.

அதன்படி, கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 2 லட்சத்து 17 ஆயிரத்து 70 பத்திர ஆவணங்கள், பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இதன் மூலம் அரசுக்கு ரூ.792 கோடியே 65 லட்சம் வருவாய் கிடைத்து இருக்கிறது.

கடந்த ஆண்டில் இதே ஆகஸ்டு மாதத்தில் 2 லட்சத்து 649 பத்திர ஆவணங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு இருந்தன. இதன் மூலம் அரசுக்கு ரூ.786 கோடியே 84 லட்சம் வருவாய் கிடைத்து இருந்தது.

அதனோடு ஒப்பிட்டு பார்க்கையில் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் பத்திரப்பதிவும், அதன் மூலம் வருவாயும் உயர்ந்து இருக்கிறது. ரியல் எஸ்டேட் துறை சீர்பெற்றுவிட்டதா? என்று எண்ணும் அளவுக்கு பத்திர பதிவுத்துறையில் கடந்த ஆகஸ்டு மாதம் வருவாய் உள்ளது.

இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் பா.ஜோதி நிர்மலாசாமி கூறுகையில், ‘கொரோனா தொற்று காரணமாக தற்போதுள்ள இந்த சூழ்நிலையிலும் பத்திரப்பதிவு துறையில் பலர் தங்களுடைய பத்திரங்களை பதிவு செய்து இருக்கின்றனர். இது கடந்த ஆண்டில் இதேமாதத்தில் இருந்த பதிவை விட அதிகம். பதிவுக்காக வரும் பொதுமக்களுக்கு கொரோனா நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக செய்யப்படுகின்றன. டோக்கன் முறையில் சமீப நாட்களாக சில இடர்பாடுகள் இருந்ததாக தகவல்கள் வந்தன. தற்போது அதிலும் சில சீர்திருத்தத்தை கொண்டு வந்து இருக்கிறோம்.’ என்றார்.

Next Story