செப்டம்பர் 1-ம் தேதி முதல் மாணவருக்கு தலா 10 முட்டை வழங்க தமிழக அரசு அரசாணை


செப்டம்பர் 1-ம் தேதி முதல் மாணவருக்கு தலா 10 முட்டை வழங்க தமிழக அரசு அரசாணை
x
தினத்தந்தி 4 Sep 2020 8:12 AM GMT (Updated: 2020-09-04T13:42:36+05:30)

செப்டம்பர் 1-ம் தேதி முதல் மாணவருக்கு தலா 10 முட்டை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை:

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அனைத்துப் பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டன. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றானது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பள்ளிகள் திறப்பது தொடர்பாக தமிழக அரசு இதுவரை எவ்வித முடிவும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. இதனால் பல தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வந்தனர்.

இதனைத்தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசும் ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி மூலம் வகுப்புகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இதற்கிடையில் கொரோனா பரவி வரும் சூழல் என்பதால், மாணவர்களின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு போன்ற உணவு பொருட்களை வழங்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்தது.

இந்த கோரிக்கையை  அடிப்படையாக கொண்டு வழக்கு தொடரப்பட்ட நிலையில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் பொருள்களான அரிசி, பருப்பு போன்றவை அந்தந்தப் பள்ளிகளிலேயே நேரடியாக விநியோகிக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து அண்மையில் அனைத்து மாணவர்களும், அவர்களது பள்ளிகளில் உலர்ப்பொருட்களை வாங்கி சென்றனர். மேலும் மாணவர்கள் வர முடியாதபட்சத்தில் பெற்றோரும் அந்தப் பொருள்களை வாங்கிச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் உலர் பொருள்களுடன் முட்டையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு முட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

அதனை பெற்றோர் வசம் பள்ளிகள் மூலமாகவோ அல்லது நியாயவிலைக் கடைகள் மூலமாகவோ விநியோகிக்கலாம் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து தமிழக அரசானது அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தது. அதன் அடிப்படையில், செப்டம்பர் 1 முதல் ஒவ்வொரு மாணவருக்கும் தலா 10 முட்டைகள் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது பள்ளிகள் திறக்கப்படும் வரை முட்டைகளை வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் சத்துணவு பொருட்களுடன் முட்டைகளும் வீட்டிற்கே சென்று வழங்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள விரிவான அரசாணையில் கொரோனா பரவல் காரணமாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளி பயனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் சத்துணவு பொருட்களுடன், மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் வரை ஒவ்வொரு மாணவருக்கும் தலா 10 முட்டைகள் வழங்க தமிழக ஆணையருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளுக்கு மாணவர்கள் அவ்வப்போது வருவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து, இலவச பாட புத்தகங்கள் வழங்கும்போதே முட்டைகளும் சேர்த்து வழங்க ஆணையிடப்பட்டிருக்கிறது.

Next Story