பள்ளிகள் திறக்கும் வரை மாதந்தோறும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு, 10 முட்டை - தமிழக அரசு உத்தரவு


பள்ளிகள் திறக்கும் வரை மாதந்தோறும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு, 10 முட்டை - தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 5 Sept 2020 4:53 AM IST (Updated: 5 Sept 2020 4:53 AM IST)
t-max-icont-min-icon

இந்த மாதத்தில் (செப்டம்பர்) இருந்து மீண்டும் பள்ளிகள் திறக்கும் வரை சத்துணவு திட்ட மாணவர்களுக்கு மாதந்தோறும் அரிசி, பருப்பு மற்றும் 10 முட்டைகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசு சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை செயலாளர் சோ.மதுமதி வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளும் விடுமுறையில் உள்ள சூழ்நிலையினால் அனைத்து சத்துணவுத் திட்ட பயனாளி மாணவ, மாணவிகளுக்கு சூடான சத்துணவு சமைத்து வழங்க இயலவில்லை.

எனவே அவர்களின் ஊட்டச்சத்து நிலையை கருத்தில் கொண்டு, கோடை விடுமுறை காலமான கடந்த மே மாதத்திற்கு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தலா 3.100 கிலோ அரிசியும், 1.200 கிலோ பருப்பும்; உயர் கல்வி மாணவ, மாணவிகளுக்கு தலா 4.650 கிலோ அரிசியும், 1.250 கிலோ பருப்பும் வழங்குவதற்கு ஆணையிடப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜூன் முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நாள் வரை உள்ள பள்ளி வேலை நாட்களுக்கு மட்டும், சத்துணவுத் திட்ட தொடக்கப்பள்ளி பயனாளிகளுக்கு தினமும் 100 கிராம் அரிசி, 40 கிராம் பருப்பு மற்றும் உயர் தொடக்கப்பள்ளி பயனாளிகளுக்கு நாளொன்றுக்கு 150 கிராம் அரிசி, 56 கிராம் பருப்பு உலர் உணவுப்பொருளாக வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்டு 7-ந் தேதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், உலர் உணவுப் பொருட்களை மே மாதம் பள்ளிகளில் வழங்கியது போல முட்டையையும் கொரோனா தொற்று முடியும் வரை அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள் அல்லது ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களை கொண்டு வழங்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காலக்கட்டத்தில் பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகளை தினமும் அழைத்து முட்டைகளை வழங்க முடியாது. முககவசம், சமூக இடைவெளி போன்றவற்றை கடைபிடிக்கும் சூழ்நிலையில், முட்டைகள் கெடவும், உடைந்து போகவும் வாய்ப்புகள் அதிகம் என்று அரசுக்கு சமூகநல ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், 20.39 லட்சம் தொடக்கப்பள்ளி பயனாளிகள், 13.61 லட்சம் உயர் தொடக்கப்பள்ளி பயனாளிகள், 4,746 தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்புப் பள்ளி பயனாளிகள் என மொத்தம் 34 லட்சத்து 4 ஆயிரத்து 656 பயனாளிகளுக்கு அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் உரிய அத்தாட்சியுடன் மாதத்துக்கு இருமுறை அந்தந்த சத்துணவு மையங்களுக்கு நேரில் வரவழைத்து முட்டைகளையும், உலர் உணவுப் பொருட்களையும் வழங்கலாம் என்று கூறியிருக்கிறார்.

அவரது கருத்துருவை அரசு கவனமுடன் பரிசீலித்தது. இந்த மாதம் முதல் சத்துணவு திட்ட பயனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் உலர் உணவுப் பொருட்களுடன் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் வரை மாதம் ஒன்றுக்கு 10 முட்டைகள் வழங்க வேண்டும்.

மாணவ, மாணவியர் அடிக்கடி பள்ளிக்கு வருவதைத் தவிர்க்க பள்ளிக் கல்வித் துறை வழங்கும் கல்வி உபகரணங்களை வழங்கும் போதே உலர் உணவுப் பொருள் மற்றும் முட்டைகளை சேர்த்து வழங்க வேண்டும். அப்போது கொரோனா தொற்று தடுப்புக்கான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story