தமிழகத்தில் நாளை முதல் இயக்கப்பட உள்ள 13 சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது - பயணிகள் ஆர்வம்


தமிழகத்தில் நாளை முதல் இயக்கப்பட உள்ள 13 சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது - பயணிகள் ஆர்வம்
x
தினத்தந்தி 6 Sept 2020 5:30 AM IST (Updated: 6 Sept 2020 4:10 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நாளை முதல் இயக்கப்பட உள்ள 13 சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. பயணிகள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.

சென்னை,

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் பஸ், ரெயில் போக்குவரத்து முடக்கப்பட்டு இருந்தது. ஊரடங்கில் அடுத்தடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் மாவட்டத்துக்குள் மட்டும் போக்குவரத்து சேவை இயக்கப்பட்டது. நாளை (திங்கட்கிழமை) முதல் மாவட்டங்கள் இடையேயும் பஸ் சேவை இயக்கப்படுகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும் என தெற்கு ரெயில்வே நிர்வாகத்திற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த கோரிக்கையை ஏற்று சென்னையில் இருந்து மதுரை, கோவை, தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடிக்கு 9 சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்தது. அதன்பின்னர் கூடுதலாக 4 ரெயில்கள் இயக்கப்படும் என நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த சிறப்பு ரெயில்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் குறிப்பிட்ட நேரங்களில், குறிப்பிட்ட வழித்தடங்கள் வழியாக இயக்கப்படுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் நாளை முதல் இயக்கப்பட உள்ள 13 சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. சென்னையில் எழும்பூர் ரெயில் நிலையம், சென்டிரல் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையம், தாம்பரம் மற்றும் மாம்பலம் ரெயில் நிலையங்கள் என 4 இடங்களில் டிக்கெட் முன்பதிவு நடந்தது. காலை 8 மணி முதல் ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

சுமார் 5 மாதங்களுக்கு பிறகு மேற்கண்ட 4 டிக்கெட் கவுண்ட்டர்களில் நேற்று முன்பதிவு செய்ய வருவோருக்காக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. முக கவசம் அணிந்து, கைகளில் கிருமிநாசினி தெளித்த பின்னரே டிக்கெட் கவுண்ட்டர்களில் அனுமதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையாக சென்று படிவத்தை பூர்த்தி செய்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.

குறிப்பாக டிக்கெட் முன்பதிவு செய்யும் படிவத்தில் செல்போன் எண் மற்றும் முகவரியை கண்டிப்பாக எழுத வேண்டும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து டிக்கெட் முன்பதிவு செய்ய வந்தவர்கள் படிவத்தில் மேற்கண்ட விவரங்களை குறிப்பிட்டனர்.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

பொதுவாகவே ரெயில்வே டிக்கெட் கவுண்ட்டர்களில் முன்பதிவு செய்யும்போது புறப்படும் இடம், சேரும் இடம், தேதி உள்ளிட்ட சில விவரங்களை குறிப்பிட்டால் மட்டுமே போதுமானது. ஆனால் தற்போது கொரோனா பீதி நிறைந்திருக்கும் சூழலில் மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ரெயில் போக்குவரத்து இயக்கப்பட இருக்கிறது. எனவே முன்பதிவு படிவத்தில் கட்டாயம் பயணிகளின் முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற வேண்டும் என நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது. எனவே நாங்களும் டிக்கெட் முன்பதிவு செய்ய வருவோருக்கு ரெயில்வே நிர்வாகத்தின் அறிவுரைகளை எடுத்துச் சொல்லி புரியவைக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story