திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் பக்தர்களின் வருகை அதிகரிப்பு


திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் பக்தர்களின் வருகை அதிகரிப்பு
x
தினத்தந்தி 6 Sept 2020 8:40 AM IST (Updated: 6 Sept 2020 8:40 AM IST)
t-max-icont-min-icon

இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டதால் 5 மாதங்களுக்குப் பிறகு திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

காரைக்கால்,

ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் இந்தியாவிலும் புகுந்து மிரட்டி வருகிறது. இதையொட்டி கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி நள்ளிரவு முதல் தேசிய ஊரடங்கு நடைமுறைபடுத்தப்பட்டது. இதனால் பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. அனைத்து வழிபாட்டுதலங்களும் மூடப்பட்டன. தொற்று பரவலை தடுக்கும் வகையில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்களும் கொண்டுவரப்பட்டன.

மாவட்டம், பிற மாநிலத்திற்கு செல்ல இ-பாஸ் நடைமுறைக்கு வந்தது. இதனால் பொதுமக்கள் வெளி இடங்களுக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதற்கிடையே மத்திய, மாநில அரசுகள் சார்பில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி புதுவை மாநிலத்தில் கோவில்கள், அரசு பஸ்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. வழிபாட்டுத்தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்ததாலும், தமிழகத்தில் பஸ்கள் இயக்காததாலும் வெளி மாநிலங்களில் இருந்து பொதுமக்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல முடியாத நிலை தொடர்ந்தது.

இந்தநிலையில் இ-பாஸ் நடைமுறையை தமிழக அரசு ரத்து செய்ததுடன், நாளை (திங்கட்கிழமை) முதல் பொது போக்குவரத்துக்கும் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ததாலும், சனிக்கிழமை என்பதாலும் கடந்த 5 மாதங்களுக்குப் பிறகு காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று அதிகாலை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வேன், கார், ஆட்டோ மூலம் சனிபகவான் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். ஆனால் அங்குள்ள நளன் குளத்தில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இ-பாஸ் முறை ரத்து, கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு முன்கூட்டியே சனிபகவான் கோவிலில் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ் ஆகியோர் தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன.

அதன்படி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசம் அணிந்தும் சாமி தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை முதல் மாலை வரை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சாமி தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

பக்தர்கள் கைகளை தூய்மைப்படுத்திக்கொள்ள சானிடைசர் வழங்கப்பட்டது. வெப்பமானி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 5 மாதங்களுக்குப் பின்னர் அதிக அளவில் பக்தர்கள் வருகை இருந்ததால் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Next Story