ஞாயிற்றுகிழமை ஊரடங்கு ரத்து எதிரொலி - சாலைகளில் அதிகரித்த மக்கள் கூட்டம், இறைச்சி கடைகளில் மக்கள் குவிந்தனர்


ஞாயிற்றுகிழமை ஊரடங்கு ரத்து எதிரொலி - சாலைகளில் அதிகரித்த மக்கள் கூட்டம், இறைச்சி கடைகளில் மக்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 6 Sept 2020 11:59 AM IST (Updated: 6 Sept 2020 11:59 AM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இறைச்சிக் கடைகளிலும் மக்கள் குவிந்தனர்.

சென்னை,

கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக் கிழமைகளில், தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், தற்போது, அது ரத்து செய்யப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு ரத்துக்கு பிந்தைய, முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று  இறைச்சிக் கடைகள், மீன் கடைகளில் மக்கள் குவிந்தனர். 5  மாதங்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமையில் இறைச்சி மற்றும் மீன் கடைகள் செயல்படுவதால் சென்னை மாநகரம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், சமூக இடைவெளி கடைப்பிடிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதுபோல, காலையில் இருந்தே தேனீர் கடைகள், ஓட்டல்கள் திறக்கப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்தும் இயங்குவதால், சென்னையில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

மீன்பிடி துறைமுகத்தில் குவிந்த வியாபாரிகள் - சோதனைக்குப்பின் மீன்கள் வாங்கி சென்றனர்


காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலை முதலே மீன்களை வாங்குவதற்காக மீன் வியாபாரிகள், பொதுமக்கள்  அதிகளவில் குவிந்தனர். எனினும்,  நோய் தொற்று பரவாமல் இருக்க, உரிய அனுமதி பெற்ற மீன் வியாபாரிகள் மட்டுமே காவலர்களின் சோதனைக்கு பின்பு உள்ளே அனுமதிக்கப்பட்டு மீன்கள் வாங்கி சென்றனர்.
ஒருசில வியாபாரிகளை தவிர, பெரும்பாலானோர் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியில்லாமல் கூட்டம் கூட்டமாக மீன்களை வாங்கி சென்றனர். இதனால் காசிமேடு கடற்கரை திருவிழா போல் களைகட்டியது.

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவிலான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியை வாகனங்கள் அதிக அளவில் கடந்து செல்கின்றன. குறிப்பாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிகப்படியான வாகனங்கள் சென்று கொண்டிருக்கிறது. போக்குவரத்தை சரி செய்யும் பணியில் சுங்கச்சாவடி போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் கூட்டத்தில் மதுரை மாநகரம்


கடந்த இரண்டு மாதங்களாக ஞாயிற்றுக்கிழமை தோறும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், மதுரையில் இந்த ஞாயிற்றுக்கிழமையில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. மதுரை மாநகர் முழுவதும் போக்குவரத்துக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படாததால், சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமான அளவு காணப்படுகிறது.

இயல்பு நிலைக்கு திரும்பிய கோவை நகரம்


பல வாரங்களுக்கு பிறகு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இல்லாததால், கோவை மாநகரமும்,  இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. பொதுமக்கள் முக கவசங்களுடன் வீடுகளில் இருந்து வெளியே வந்துள்ளனர். காலையில் இருந்தே கடைகள் மற்றும் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

நெல்லை நகர சாலைகளில் அதிகரித்துள்ள மக்கள் கூட்டம்


முழு ஊரடங்கு இல்லாத முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று, நெல்லை மாவட்டத்தில் பொதுமக்கள் சகஜமான முறையில் சாலைகளில் வலம் வருகின்றனர். மாநகராட்சி பகுதிக்குள் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிப்பதற்காக 4 மண்டலங்களிலும் உதவி ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சிக்கன் விலை உயர்வால் அசைவ பிரியர்கள் அதிருப்தி


வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், பல மாதங்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை இறைச்சி கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆடு, கோழி மற்றும் மீன் இறைச்சி வாங்க மக்கள் அதிக அளவில் குவிந்தனர். சென்ற வாரம் 150 முதல் 180 வரை விற்பனை செய்யப்பட்ட கோழிக்கறி, இன்றைய தினம் 220 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டதால் அசைவ பிரியர்கள் அதிருப்தி அடைந்தனர். எனினும், மக்கள் சமூக விலகலை கடைபிடித்து நின்று, விருப்பமான இறைச்சியை வாங்கிச் சென்றனர்.

இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்


தமிழகத்தில் இன்று முதல் ஞாயிற்றுகிழமை ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இறைச்சி கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கடைகளுக்கு வந்த பெரும்பாலான மக்கள் அரசு அறிவித்த பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கவில்லை எனக் குற்றம்சாட்டும் சமூக ஆர்வலர்கள், தொற்று பரவல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story