சேலம் மாவட்டத்தில் 10,700 வங்கி கணக்குகள் முடக்கம் - விவசாயிகள் என்ற போர்வையில் மோசடி நடந்தது அம்பலம்


சேலம் மாவட்டத்தில் 10,700 வங்கி கணக்குகள் முடக்கம் - விவசாயிகள் என்ற போர்வையில் மோசடி நடந்தது அம்பலம்
x
தினத்தந்தி 7 Sept 2020 5:45 AM IST (Updated: 7 Sept 2020 2:33 AM IST)
t-max-icont-min-icon

பிரதமரின் நிதி உதவி வழங்கும் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக சேலம் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 700 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. விவசாயிகள் என்ற போர்வையில் நடந்த இந்த மோசடி தொடர்பாக 51 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 2 பேர் கைதாகி இருக்கிறார்கள்.

சேலம்,

பிரதமரின் நிதி உதவி திட்டத்தின் கீழ், ஏழை-எளிய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த தொகை தலா ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் வேளாண்மை துறை மூலம் செலுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தில் தகுதியற்ற பயனாளிகளை விவசாயிகள் என்ற போர்வையில் போலி ஆவணங்கள் மூலம் இணைத்து தமிழகம் முழுவதும் பெருமளவில் மோசடி நடந்திருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் அல்லாத ஏராளமான பேர் விண்ணப்பித்து இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற்றது தெரியவந்ததை தொடர்ந்து அவர்களது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும் 13 ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். முறைகேடாக நிதி உதவி பெற்ற விவசாயிகள் அல்லாதவர்களிடம் இருந்து முதல் கட்டமாக ரூ.4 கோடியே 20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் அல்லாத ஏராளமான பேர், போலியாக விண்ணப்பித்து நிதி உதவி பெற்றது கண்டுபிடிக்கப்பட்டதால், அவர்களிடம் இருந்து முதல் கட்டமாக ரூ.4½ கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இதேபோல் சேலம் மாவட்டத்திலும் பிரதமரின் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் மோசடி நடந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது. ஆத்தூர் வேளாண்மைத்துறை சார்பில் ஆத்தூர் ஒன்றியத்தில் சுமார் 600 பேரை போலியாக இத்திட்டத்தில் சேர்த்து மோசடியில் ஈடுபட்டு இருப்பது அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த முறைகேட்டில் ஆத்தூர் வேளாண்மைத்துறை அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரியும் ராஜா என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து, அவரை பணி இடைநீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

இதற்கிடையே, சேலம் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்து 700 பேர் விவசாயிகள் என்ற போர்வையில் முறைகேடாக பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டு இருப்பதாகவும் புகார் எழுந்து உள்ளது. இதில், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் என பதிவு செய்து முறைகேடாக நிதி பெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய வேளாண்மைத்துறை அலுவலகங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் நடந்த இந்த மாபெரும் மோசடி தொடர்பாக, 10 ஆயிரத்து 700 பேரின் வங்கி கணக்குகளை அதிகாரிகள் முடக்கி உள்ளனர். அந்த கணக்குகளில் அரசு செலுத்திய பணத்தை திரும்ப பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இந்த முறைகேடு தொடர்பாக சேலம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன், சேலம் சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளித்து உள்ளார். அதன்பேரில், அரசு பணத்தை முறைகேடாக கையாடல் செய்தல் பிரிவின் கீழ் 51 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். சேலம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பால்ராஜ், விஜயலட்சுமி மற்றும் போலீசார் அடங்கிய 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வருகிறது.

முதல் கட்ட விசாரணையில், தனியார் கணினி மையங்களில் பயனாளிகள் பட்டியல் பதிவேற்றம் செய்யப்பட்டதில் போலி ஆவணங்களை இணைத்து வெவ்வேறு மாவட்டங்களில் விவசாயம் செய்வதாக பதிவிட்டு மோசடி செய்தது தெரியவந்து இருக்கிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள 20 வட்டார வேளாண் அலுவலகங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தாரமங்கலம் வட்டாரத்தில் 2 தனியார் கணினி மையங்களில் 160 பயனாளிகள் பெயரை போலி ஆவணம் இணைத்து பதிவேற்றம் செய்த ராகுல், கலையரசன் ஆகிய 2 பேரை நேற்று முன்தினம் இரவு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே, சேலம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன், திருச்சி பாசன மேலாண் பயிற்சி நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் கூறுகையில், பிரதமரின், விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் மோசடி நடந்ததாக வந்த புகாரின் பேரில் 10 ஆயிரத்து 700 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாகவும், ரூ.4 கோடி வரை மோசடி நடந்ததாக தெரிய வந்துள்ளதாகவும், முறைகேடாக பயனாளிகளாக சேர்ந்தவர்களிடம் இருந்து தற்போது வரை ரூ.1 கோடியே 20 லட்சம் திரும்ப பெறப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

Next Story