‘நீட்’ தேர்வுக்கான ஆயத்த பணிகளில் தேசிய தேர்வு முகமை தீவிரம்; நாடு முழுவதும் 13-ந் தேதி நடக்கிறது


‘நீட்’ தேர்வுக்கான ஆயத்த பணிகளில் தேசிய தேர்வு முகமை தீவிரம்; நாடு முழுவதும் 13-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 7 Sept 2020 3:00 AM IST (Updated: 7 Sept 2020 2:48 AM IST)
t-max-icont-min-icon

ஜே.இ.இ. முதன்மை தேர்வை தொடர்ந்து, வருகிற 13-ந் தேதி நடைபெற உள்ள ‘நீட்’ தேர்வுக்கான ஆயத்த பணிகளில் தேசிய தேர்வு முகமை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

சென்னை,

கொரோனா தொற்று இருக்கும் இந்த சூழ்நிலையில் ஜே.இ.இ. முதன்மை தேர்வு, ‘நீட்’ தேர்வை நடத்துவதா? என பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. இருப்பினும், தேர்வை நடத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டியது. அதன்படி, ஜே.இ.இ. முதன்மை தேர்வு கடந்த 1-ந் தேதி தொடங்கி, நேற்றுடன் நிறைவுபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 660 மையங்களில் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்தி முடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு வருகிற 13-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை நடத்துவதற்கு தேசிய தேர்வு முகமை தற்போது தயாராகி வருகிறது. ஜே.இ.இ. முதன்மை தேர்வு கணினி மூலம் நடத்தப்பட்டது. ஆனால் ‘நீட்’ தேர்வு அப்படி இல்லை. அது பேனா மற்றும் பேப்பர் மூலமாக நடத்தப்பட இருக்கிறது.

நாடு முழுவதும் இந்த தேர்வை 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் எழுத உள்ளனர். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் எழுதுகின்றனர். கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சமூக இடைவெளியோடு மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு ஏதுவாக 3 ஆயிரத்து 842 தேர்வு மையங்களாக எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு தேர்வு அறைக்கும் 24 மாணவர்களுக்கு பதிலாக 12 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.

தேர்வு மையம் அமைந்துள்ள பகுதிகளில் சமூக இடைவெளியோடு மாணவர்கள் இருப்பதற்கு ஏதுவாக போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், தேர்வு அறைக்குள் வரும்போதும், தேர்வு அறையிலும் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்த வழிகாட்டும் ஆலோசனைகள் ஹால் டிக்கெட்டோடு சேர்த்து வழங்கப்பட்டு இருப்பதாகவும், அதனை மாணவர்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இதுதவிர இந்த தேர்வுக்கு ஒத்துழைப்பு கொடுக்க, அந்தந்த மாநில அரசுகளுக்கு தேசிய தேர்வு முகமை கடிதமும் எழுதியுள்ளது. தேர்வு அறைக்குள் நுழையும் மாணவர்கள் தேசிய தேர்வு முகமையால் வழங்கப்படும் முக கவசத்தைதான் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

மேலும் ஹால் டிக்கெட்டுகளில் (அட்மிட் கார்டு) பூர்த்தி செய்ய வேண்டிய விவரங்களை சரியாக பூர்த்தி செய்து தேர்வு முடிந்ததும், தேர்வுக்கூட கண்காணிப்பாளரிடம் தேர்வர்கள் ஒப்படைக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் விடைத்தாள் மதிப்பீடு செய்யாமலும் போகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே தேர்வர்கள் ஹால் டிக்கெட்டில் கேட்கப்பட்டிருக்கும் தகவலை முறையாக பூர்த்தி செய்ய வேண்டும்.

Next Story