166 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் வெளியூர் பேருந்து சேவை தொடங்கியது: மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கம்


166 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் வெளியூர் பேருந்து சேவை தொடங்கியது: மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கம்
x
தினத்தந்தி 7 Sept 2020 7:44 AM IST (Updated: 7 Sept 2020 7:44 AM IST)
t-max-icont-min-icon

166 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் வெளியூர் பேருந்து சேவை தொடங்கி உள்ளது. மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 8-ம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. ஒவ்வொரு கட்ட ஊரடங்கு உத்தரவின் போதும், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, ஏற்கனவே தமிழகம் முழுவதும் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சென்னை மண்டலம் மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலம் ஆகிய 2 மண்டலங்களையும் தவிர்த்து பிற மண்டலங்களில் பஸ் போக்குவரத்து ஜூன் 1-ந் தேதி முதல் தொடங்கப்பட்டது. எனினும் பஸ்கள் அந்தந்த மண்டலங்களுக்குள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.

பின்னர், ஜூன் 26-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை சென்னை மண்டலம் தவிர்த்து ஏனைய மண்டலங்களில் பஸ் போக்குவரத்து நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கொரோனா தொற்று வேகமாக பரவியதால், ஜூலை 1-ந் தேதி முதல் அனைத்து பஸ் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டன.

அதன் பிறகு, கடந்த 1-ந் தேதி முதல் மாவட்டங்களுக்குள் மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியது. இந்த நிலையில், இன்று முதல் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து தொடங்கும் என்று அரசு அறிவித்தது. அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை என நீண்டதூர இடங்களுக்கு 1,100 பஸ்களை இயக்கி வருகிறது.

மேலும் விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகங்களில் இருந்தும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து இன்று முதல் தொடங்கி உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் வெளியூர் பேருந்து சேவை தொடங்கியது. சென்னை கோயம்பேட்டில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 400 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. முககவசம் அணிந்து வரும் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். 

கிருமிநாசினி தெளிக்கும் கருவி மூலம் கைகளை சுத்தப்படுத்திக்கொண்டு, தொடர்ந்து சமூக இடைவெளியுடன் பேருந்தில் பயணிகள் அமர வைக்கப்பட்டனர்.

Next Story