மாவட்டங்கள் இடையே இன்று முதல் பேருந்து சேவை தொடக்கம்: அரசு விரைவு பேருந்துகளில் வெளியூர் செல்ல 15 ஆயிரம் பேர் முன்பதிவு
அரசு விரைவு பேருந்துகளில் வெளியூர் செல்ல 15 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். பெரும்பாலும் தென் மாவட்டங்களுக்கு அதிகம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
சென்னை,
தமிழகம் முழுவதும் அரசு விரைவு பேருந்துகள் இன்று முதல் ஓடத்தொடங்கின. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து காலையில் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டன.
பொதுமக்கள் தேவைக்கு ஏற்ப பஸ்கள் விடப்பட்டது. கோயம்பேட்டில் இருந்து காலை 8.30 மணி நிலவரப்படி 6 பஸ்கள் புறப்பட்டு சென்றன. பெரும்பாலான பஸ்கள் மாலையில் இருந்து இயக்கப்படுகிறது. நீண்ட தூரம் செல்வதற்கு 15 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர்.
முன்பதிவு செய்யாத பஸ்களும் குறைவான அளவில் இயக்கப்பட்டது. 80 பஸ்களில் இடங்கள் நிரம்பின. சென்னை கோயம்பேட்டில் இருந்து, சேலம், கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, திருச்செந்தூர், மார்த் தாண்டம், நாகர்கோவில், கன்னியாகுமரி, தஞ்சாவூர், வேளாங்கன்னி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலும் தென் மாவட்டங்களுக்கு அதிகம் பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்று போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும் போது, பயணிகள் தேவைக்கு ஏற்ப பஸ்களை இயக்கத் தயாராக இருக்கிறோம். சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து நகரங்களில் இருந்து இன்று பஸ் போக்குவரத்து தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பயணிகளை ஏற்றி வருகிறோம்.
டிரைவர், கண்டக்டர்களுக்கும் இதுபற்றிய அறிவுரைகளை கூறியுள்ளோம். இன்று மாலையில் இருந்து வெளியூர்களுக்கு அதிக அளவு பஸ்கள் இயக்கத் தயாராக இருக்கிறோம் என்றார்.
Related Tags :
Next Story