‘இரு மொழி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது’ - மத்திய மந்திரிக்கு, அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம்


‘இரு மொழி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது’ - மத்திய மந்திரிக்கு, அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம்
x
தினத்தந்தி 7 Sep 2020 8:45 PM GMT (Updated: 7 Sep 2020 8:13 PM GMT)

புதிய கல்வி கொள்கை குறித்து விரிவான கருத்து விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றும், இருமொழி கொள்கையை தொடர்ந்து பின்பற்ற அரசு முடிவு செய்துள்ளதாகவும் மத்திய மந்திரிக்கு, அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை, 

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியாலுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து முதல்-அமைச்சர், மூத்த அமைச்சர்களுடன் விவாதிக்கப்பட்டது. பின்னர், புதிய கல்வி கொள்கையின் சாதக, பாதகங்கள் குறித்து அறிந்து கொள்ள உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டது. இந்தக்குழுவின் கருத்துகளையும், பரிந்துரைகளையும் அரசு ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது.

எனவே, தமிழக அரசு உரிய நேரத்தில் விரிவான கருத்துகளை சமர்ப்பிக்கும். இருந்தபோதிலும் முதற்கட்ட கருத்துகளை முன்வைக்க விரும்புகிறேன்.

2035-ம் ஆண்டில் உயர்கல்வித்துறையில் மொத்த சேர்க்கை விகிதம் 50 சதவீதத்தை எட்ட வேண்டும் என்று புதிய கல்வி கொள்கை முன்மொழிந்துள்ளது. தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தமிழகம் 2035-ம் ஆண்டில் மொத்த சேர்க்கை விகிதம் 65 சதவீதம் என்ற இலக்கை எட்டும்.

அகில இந்திய அளவில் ஆசிரியர், மாணவர் விகிதாசாரம் 1:26 என உள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் இந்த விகிதாசாரம் 1:17 என உள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறேன். 2 முக்கிய பாடங்களை உள்ளடக்கி பி.எட். படிப்பை 4 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பாக மாற்ற புதிய கல்வி கொள்கை திட்டமிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும்.

உயர்கல்வியில் சேர்வதற்கு தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) மூலம் நுழைவுத்தேர்வை நடத்த புதிய கல்வி கொள்கை முன்மொழிந்துள்ளது. இந்த நடவடிக்கை கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கும். தமிழக அரசிடம் அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை.

புதிய கல்வி கொள்கை தன்னாட்சி கல்லூரி, பல்கலைக்கழகங்களின் உறுப்பு கல்லூரி என்று கல்லூரிகளை வகைப்படுத்த முடிவு செய்துள்ளது. அவ்வாறு வகைப்படுத்தும்போது, ஏற்கனவே பல்கலைக்கழகங்களின் இணைப்பு பெற்ற கல்லூரிகள் தன்னாட்சி கல்லூரிகளாக மாறுவதற்கான திறனை இழக்க நேரிடும்.

தமிழகத்தில் 587 கல்லூரிகள் உள்ளன. இதில் 53 கல்லூரிகள் தன்னாட்சி கல்லூரிகளாக இருந்து வருகின்றன. மற்ற அனைத்து கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்த கல்லூரிகளாக இருந்து வருகின்றன. கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்த, தமிழகத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்பு தொடர அனுமதிக்கலாம்.

உயர்கல்வி நிறுவனங்கள் பிராந்திய மொழிகளில் பட்டப்படிப்புகளை வழங்க புதிய கல்வி கொள்கை திட்டமிட்டுள்ளது. இது, தமிழகத்தில் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழக அரசு எப்போதும் இருமொழி கொள்கையை பின்பற்றி வருகிறது. இது வெற்றிகரமாக உள்ளது. எதிர்காலத்திலும் இரு மொழி கொள்கையை தொடர்ந்து பின்பற்ற தமிழக அரசு ஏற்கனவே முடிவெடுத்து உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story