கல்வி கட்டணத்தில் முதல் தவணை செலுத்த பெற்றோருக்கு 30-ந் தேதி வரை அவகாசம்: ஐகோர்ட்டு உத்தரவு
கல்வி கட்டணத்தில் முதல் தவணையாக 40 சதவீத தொகையை பள்ளிக்கூடங்களுக்கு செலுத்த வருகிற 30-ந் தேதி வரை பெற்றோருக்கு கால அவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கொரோனா ஊரடங்கினால் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் கல்வி கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதி என்.ஆனந்தவெங்கடேஷ், “கடந்த கல்வி ஆண்டில் (2019-2020) வசூலிக்கப்பட்ட கல்வி கட்டணத்தில், 40 சதவீத கட்டணத்தை ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் முதல் தவணையாக கல்வி நிறுவனங்கள் வசூலிக்கலாம். அடுத்த 35 சதவீத தொகையை கல்லூரிகள், பள்ளிகள் திறந்து 2 மாதங்களுக்கு பின்னர் வசூலிக்கலாம்” என்று கடந்த ஜூலை 17-ந் தேதி உத்தரவிட்டார்.
ஆனால் இந்த உத்தரவை மீறி பல பள்ளிக்கூடங்கள் முழு கட்டணத்தையும் வசூலித்ததாக நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளரை ஆஜராக நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்தவெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் காணொலி காட்சி வாயிலாக ஆஜராகி, பள்ளி கல்வித்துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
அவர் கூறும்போது, “37 மாவட்டங்களில் உள்ள தலைமை கல்வி அதிகாரிகளின் இ-மெயில் முகவரி, பொதுமக்களுக்கு டி.வி. மற்றும் பத்திரிகைகள் வாயிலாக விளம்பரப்படுத்தப்பட்டது. இதன் மூலம் 34 பள்ளிகளுக்கு எதிராக புகார்கள் வந்தன. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி, அதில் 29 புகார்களுக்கு முகாந்திரம் உள்ளதை உறுதி செய்தனர். சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்துக்கு விளக்கம் கேட்டு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 5 புகார்களில் விதிமீறல் எதுவும் இல்லை என்பதால், அவை நிராகரிக்கப்பட்டது” என்று விளக்கம் அளித்தார்.
இதையடுத்து நீதிபதி என்.ஆனந்தவெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில், “40 சதவீத கல்வி கட்டணத்தை விட அதிகம் வசூலித்த பள்ளிகளின் விவரங்களை கல்வித்துறை தாக்கல் செய்ய வேண்டும். அந்த பள்ளிகள் மீது தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கொரோனா ஊரடங்கினால் பல பெற்றோரால் கடந்த ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் முதல் கல்வி கட்டண தவணை தொகையை செலுத்த முடியவில்லை என்று கூறப்பட்டது. எனவே, முதல் தவணையை செலுத்த வருகிற 30-ந் தேதி வரை பெற்றோருக்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையை வருகிற 23-ந் தேதிக்கு தள்ளி வைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story