சிகிச்சை கட்டணத்தை காப்பீட்டு நிறுவனங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


சிகிச்சை கட்டணத்தை காப்பீட்டு நிறுவனங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 Sept 2020 2:30 AM IST (Updated: 8 Sept 2020 2:07 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சிகிச்சை கட்டணங்களை மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களே ஏற்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனாவால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் சிகிச்சை கட்டணங்களை ஏற்க மறுப்பதாக வரும் செய்திகள் மிகுந்த கவலை தருவதாக இருக்கின்றன. பணியில் இருப்போர் மட்டுமின்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, கொரோனா நோயை விட கடுமையான தண்டனையை தினமும் அனுபவித்து வரும் அவலம் அ.தி.மு.க. அரசால் ஏற்பட்டிருப்பதற்கு, கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அரசு சார்ந்த மருத்துவ காப்பீட்டில், கொரோனா நோய் தொற்று சிகிச்சைக்காக, சிறப்பு நிதி ஒதுக்கி கட்டண வழிகாட்டு முறையை தமிழக அரசு 24.06.2020 அன்று ஆணையிட்டதில், பல குளறுபடிகள். அந்த ஆணையின்படி கொரோனா நோய் தொற்று, ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் தான், மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் சிகிச்சைக்கான கட்டணங்களை ஏற்றுக்கொள்கின்றன என்பது கொடுமையாக இருக்கிறது.

மருத்துவ அளவுகோல்களின் படியான தொற்று மற்றும் சந்தேகிக்கக்கூடிய கொரோனா தொற்றுநிலை ஆகிய மருத்துவ சிகிச்சைக்கான கட்டணங்களை, மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்பதில்லை என்பது முரண்பாடாக இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும், அ.தி.மு.க. அரசின் ஊழல்களும் என்றும்; அரசின் நடவடிக்கைகளும், குளறுபடிகளான அறிவிப்புகளும் என்றும் தனித்தனியாக புத்தகமே தயாரித்து வெளியிடும் அளவிற்கு, அ.தி.மு.க. அரசின் தோல்விகள் வரிசையாக அணி வகுத்து நிற்கின்றன.

ஒவ்வொரு துறையிலும் தலைவிரித்தாடும் கொரோனா ஊழல், கொரோனா குளறுபடிகள் போன்றவற்றால், தினந்தோறும் நோயாளிகளின் எண்ணிக்கையும், ஒட்டுமொத்த இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிற நேரத்தில், இந்த மருத்துவ சிகிச்சை குறித்த மருத்துவ காப்பீட்டு குளறுபடிகளையும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரோ, முதல்-அமைச்சரோ கண்டுகொள்வதாக தெரியவில்லை.

இதனால், நோய்த்தொற்றுக்கு ஆளாகி, சிகிச்சை பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குறிப்பாக ஓய்வூதியதாரர்கள், மருத்துவ கட்டணத்தை தாங்களே செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவதால், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, தாங்க முடியாத வேதனைக்குள்ளாகிறார்கள். இந்த அரசுக்கும், மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களுக்கும், திரைமறைவில் ஏதோ ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில்தான் இந்த கட்டணங்கள் மறுக்கப்படுவதை அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறதா என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது.

ஆகவே, கொரோனா நோய்த்தொற்று குறித்த மேற்கண்ட 3 வகையிலான கொரோனா சிகிச்சைகளுக்குமான கட்டணங்களை மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களே கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும்; அப்படி ஏற்றுக்கொள்ள முடியாது என மறுக்கும் காப்பீட்டு நிறுவனங்களை, தமிழக அரசு தகுதி நீக்கம் செய்யும் என்று எச்சரிக்கை செய்ய வேண்டும். தாமதம் இல்லாமல் இதை செய்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை காப்பாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.


Next Story