தானியங்கி அடுக்குமாடி வாகன நிறுத்த வசதி அக்டோபர் மாதம் திறப்பு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்


தானியங்கி அடுக்குமாடி வாகன நிறுத்த வசதி அக்டோபர் மாதம் திறப்பு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
x
தினத்தந்தி 9 Sept 2020 3:30 AM IST (Updated: 9 Sept 2020 3:01 AM IST)
t-max-icont-min-icon

சென்னை தியாகராயநகர், பாண்டிபஜார் பகுதிகளில், தானியங்கி அடுக்குமாடி வாகன நிறுத்த வசதி அடுத்த மாதம் (அக்டோபர்) பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

சென்னை, 

நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:-

முதல்-அமைச்சர் உத்தரவின்படி கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பரிசோதனைகளை அதிகரித்தல், காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள், வீடுகள் தோறும் சென்று வைரஸ் தொற்று அறிகுறி உள்ள நபர்களை கண்டறிதல், வைரஸ் தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்துதல் போன்ற பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளின் மூலம் வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மழைநீர் வடிகால் திட்டப்பணிகள், சாலைப்பணிகள், பஸ் தட சாலைகளை மேம்படுத்தும் பணிகள், குளங்கள் பராமரிப்பு பணிகள் போன்ற திட்டப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் தியாகராயநகர், பாண்டி பஜார் பகுதிகளில் ஆயிரத்து 522 ச.மீ. பரப்பளவில், ரூ.40.79 கோடியில், 500 மோட்டார் சைக்கிள் மற்றும் 200 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் அடுக்குமாடி தானியங்கி வாகன நிறுத்தப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த வாகன நிறுத்தம் அடுத்த மாதம் (அக்டோபர்) திறக்கப்பட உள்ளது.

மேலும், ரூ.2.72 கோடி மதிப்பில் 2 எல்.பி.ஜி. தகனமேடை மற்றும் நடைபாதையுடன் கூடிய நவீன மயமாக்கப்பட்ட கண்ணம்மாபேட்டை இடுகாட்டை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், தமிழ்நாடு நகர்புற சாலை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின்கீழ், கஸ்தூரிபாய் ரெயில் நிலையம் முதல் திருவான்மியூர் ரெயில் நிலையம் வரை ரூ.20 கோடி மதிப்பில் பக்கிங்ஹாம் கால்வாய் கரையில் சிறுவர் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள், மியாவாகி அடர்வன காடுகள், புதிய மரங் கள், நவீன இருக்கைகள், எல்.இ.டி தெருவிளக்குகள், அலங்கார விளக்குகள், சுவர் ஓவியங்கள் மற்றும் கலைநயமிக்க சிலைகள் போன்ற வசதிகளுடன் 2.1 கி.மீ. நீளத்திற்கு நடைபாதை மற்றும் சைக்கிள் பாதை அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் முக கவசம், கிருமிநாசினி திரவம் மற்றும் கைக்கழுவும் சோப்பு தயாரிக்கப்பட்டு, தூய்மை காவலர்களுக்கு குறைந்த விலையில் தொடர்ந்து வழங்க வேண்டும். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் இதுவரை, 95 லட்சத்து 50 ஆயிரத்து 689 முக கவசங்கள் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 540 லிட்டர் கிருமிநாசினி மற்றும் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 506 லிட்டர் கை கழுவும் திரவம் தயாரிக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் த.ந.ஹரிஹரன், நகராட்சி நிர்வாகம் கமிஷனர் கா.பாஸ்கரன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குனர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, பேரூராட்சிகள் இயக்குனர் எஸ்.பழனிசாமி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் ஜெ.யு.சந்திரகலா, பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் ஜெ.மேகநாதரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story