வேதா நிலைய இழப்பீட்டு தொகையில் இருந்து ஜெயலலிதாவின் வரிபாக்கியை எடுக்க தடை கேட்டு வழக்கு


வேதா நிலைய இழப்பீட்டு தொகையில் இருந்து ஜெயலலிதாவின் வரிபாக்கியை எடுக்க தடை கேட்டு வழக்கு
x
தினத்தந்தி 9 Sept 2020 3:51 AM IST (Updated: 9 Sept 2020 3:51 AM IST)
t-max-icont-min-icon

வேதா நிலையத்துக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையில் இருந்து ஜெயலலிதாவின் வரிபாக்கி தொகையான ரூ.36.9 கோடியை வருமான வரித்துறை எடுக்க தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது.

சென்னை, 

ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் வசீகரன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் ‘வேதா நிலையம்’ வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக 24 ஆயிரத்து 322 சதுர அடி நிலத்துடன் கூடிய வேதா நிலையம் வீட்டுக்கு ரூ.67.9 கோடியை இழப்பீடாக நிர்ணயித்து, அந்த தொகையை சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் தமிழக அரசு ‘டெபாசிட்’ செய்துள்ளது.

ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது வருமான வரி மற்றும் செல்வ வரி பாக்கி வைத்துள்ளார். அந்த வரி பாக்கிக்கு அபராதம் சேர்த்து ரூ.36.9 கோடியை வருமான வரித்துறைக்கு அவர் செலுத்த வேண்டும். இதற்காக ஜெயலலிதாவின் வேதா நிலையம் உள்ளிட்ட சொத்துகளை வருமான வரித்துறை முடக்கி வைத்துள்ளது.

தற்போது வேதா நிலையத்தை, நினைவு இல்லமாக மாற்றுவதில் இடையூறு வராமல் இருக்க, கோர்ட்டில் செலுத்தப்பட்ட இழப்பீட்டு தொகையான ரூ.67.9 கோடியில் இருந்து இந்த வரிபாக்கியை செலுத்த அரசு முடிவு செய்துள்ளது.

ஜெயலலிதா வைத்து சென்ற வரி பாக்கியை மக்களின் வரி பணத்தில் இருந்து அடைப்பது என்பது ஏற்க முடியாது. ஏற்கனவே கொரோனா வைரசினால் அரசும், பொதுமக்களும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நேரத்தில், அரசியல் லாபத்துக்காக இவ்வளவு பெரிய தொகையை ஜெயலலிதாவின் வரி பாக்கிக்காக அரசு செலவு செய்ய அனுமதிக்கக் கூடாது.

எனவே, சிட்டி சிவில் கோர்ட்டில் செலுத்தப்பட்ட தொகையில் இருந்து வரி பாக்கித்தொகையான ரூ.36.9 கோடியை எடுக்க வருமான வரித்துறை ஆணையருக்கு தடை விதிக்க வேண்டும். ஜெயலலிதாவின் வரி பாக்கியை தமிழக அரசு செலுத்த தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வசீகரன் ஆஜராகி வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், “வேதா நிலையம் தொடர்பாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் தொடர்ந்துள்ள வழக்கு ஐகோர்ட்டில் உள்ள மற்றொரு அமர்வில் விசாரணையில் உள்ளது. அந்த வழக்குடன் இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க அந்த அமர்வு நீதிபதிகளிடம் மனுதாரர் முறையிடலாம்” என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.


Next Story