பலத்த மழை: கீழடி அகழாய்வு பணிகள் பாதிப்பு
பலத்த மழை காரணமாக, கீழடி அகழாய்வு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
திருப்புவனம்,
சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் 6-ம் கட்ட அகழாய்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. இந்த நிலையில் கீழடி பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் பலத்த மழை பெய்ததால், அகழாய்வு குழிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
பின்னர் மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் அதிகாரிகள் மற்றும் உதவியாளர்கள் இணைந்து, இரவு நேரத்தில் குழிகளில் தேங்கிய மழைநீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்றது. இதனால் குழிகள் முழுவதும் சேறும், சகதியுமாக மாறி காட்சியளித்து. நேற்று அந்த குழிகளில் மூடிய நிலையில் இருந்த தார்ப்பாய்களை எடுத்துவிட்டு வெயிலில் உணர வைக்கும் பணி நடைபெற்றது. நேற்று முழுவதும் அகழாய்வு பணிகள் நடைபெறவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் மீண்டும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. குழிகளில் தார்ப்பாய்கள் கொண்டு மூடினாலும், மீண்டும் தண்ணீர் தேங்கியது.
கீழடியில் தற்போது நடைபெற்று வரும் 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிக்கு இம்மாதம் இறுதி வரை மட்டுமே அனுமதி உள்ளது. எனவே பணிகளை விரைந்து முடிக்க தொல்லியல்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
Related Tags :
Next Story