21-ந்தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடக்காது: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு


21-ந்தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடக்காது: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Sept 2020 4:15 AM IST (Updated: 10 Sept 2020 2:37 AM IST)
t-max-icont-min-icon

காலாண்டு விடுமுறையாக வருகிற 21-ந் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறாது என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்து உள்ளார்.

சென்னை, 

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால், ஆன்லைன் மற்றும் கல்வித் தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகளை வருகிற 21-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் 5 நாட்களுக்கு நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பள்ளிகளில் நடத்தப்பெறும் ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தின் தாக்கத்தை குறைக்கும் வகையில் கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களை அனைத்துப் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும்.

அதன்படி, ஆன்லைன் வகுப்புகளில் வருகை, மாணவர்களின் செயல்திறன் மதிப்பீடு நோக்கங்களுக்காக கட்டாயமாக கணக்கிடக் கூடாது. மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் போது ஆன்லைன் வகுப்புகளுக்கு வருகை புரியாத மாணவர்களும், அந்த வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு இணையாக பாடங்களில் பயிற்சி பெறுவதற்காக ஆசிரியர்கள் பொறுப்பேற்று தேவைக்கேற்ப கூடுதல் பயிற்சி வகுப்புகள் நடத்தி உறுதிப்படுத்த வேண்டும்.

மின்னணு முறைகள் மற்றும் சாதனங்கள் மூலம் குழந்தைகளுக்கு தொலைவில் இருந்து அனுப்பப்படும் பாடம் சார்ந்த பணிகள் மற்றும் மதிப்பீடுகள் ஏதும் மாணவர்களின் இறுதித்தரம், மதிப்பெண்கள், செயல்திறன் மதிப்பீடு போன்றவற்றை நிர்ணயிக்க கட்டாயமாக கணக்கிடக் கூடாது.

ஆண்டுதோறும், செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிப்பது நடைமுறை ஆகும். ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் தற்போதைய சூழ்நிலையில், வருகிற 21-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் 25-ந்தேதி வரை (5 நாட்கள்) மட்டும் காலாண்டு விடுமுறையினை அறிவிக்க அரசு உத்தேசித்துள்ளது.

எனவே முதல்-அமைச்சரின் ஒப்புதலுடன் வருகிற 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறாது என அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story